பொங்கல் பண்டிகையால் கவனம் பெறாமல்போகும் சாலை பாதுகாப்பு வாரவிழாவை வேறு தேதிகளில் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் பொதுமக்கள்.
புத்தாண்டு தொடக்கத்திலேயே கடைபிடிக்கப்பட்டு வந்த சாலை பாதுகாப்பு வாரவிழா, கடந்த ஆண்டிலிருந்து ஜனவரி 11 முதல் ஒரு வாரத்துக்கு கடைபிடிக்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு வாரவிழா நடத் துவதற்காக ஆண்டுதோறும் அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், மோட்டார் வாகன ஆய் வாளர்கள், வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது, துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது போன்றவற் றுடன் விழாவை முடித்துக் கொள் கின்றனர். இதுதான் கடந்த 25 ஆண் டுகளாக நடைபெற்று வருகிறது.
தினமும் நிகழும் சாலை விபத்து களோ, அவற்றில் உயிரிழப் போரின் எண்ணிக்கையோ குறைந்த பாடில்லை. பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு பொதுமக்களின் அலட்சியமும் முக்கிய காரணம். நெடுஞ்சாலை விபத்துக்கு முக்கிய காரணம் தூக்கம் இல்லாமல் தொடர்ச்சியாக வாகனம் ஓட்டுவ தும், அதிவேகமும், சாலை விதி முறைகளை மதிக்கா ததும்தான். நின்று கொண்டி ருக்கும் லாரியின் மீது வாகனங்கள் மோதி உயிரிழப்பது தமிழகத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது.
நாட்டிலேயே தமிழகத்திலும், மகாராஷ்டிராவிலும்தான் விபத்து அதிகம் நடைபெறுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 2013-ம் ஆண்டு நிகழ்ந்த விபத்து எண் ணிக்கை 66,238. இதில் உயிரிழப் புகள் 15,563. தொடர்ந்து 11-வது ஆண்டாக சாலை விபத்து எண்ணிக் கையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.
விபத்து எண்ணிக்கையை குறைக்க, சாலை பாதுகாப்பு வார விழாவின்போது வலியுறுத்த வேண்டியது என்னென்ன என்பதை பட்டியலிடுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
நெடுஞ்சாலைகளில் முக்கிய இடங்களில் குறிப்பிட்ட வேகத்தை மீறும் வாகனத்துக்கும், கண்கூசும் முகப்பு விளக்கை பயன்படுத்து வோருக்கும், செல்போன் பேசிக் கொண்டே வாகனம் இயக்கு பவர்களுக்கும், போதையில் வாகனம் ஓட்டுபவருக்கும், இரு சக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் செல்பவர்களுக் கும், நிர்ணயிக் கப்பட்டதைவிட கூடுதல் நபர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் அதே இடத்தில் அதிகபட்ச அபராதம் விதிக் கப்பட வேண்டும். போலீஸ் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம்.
சாலையில் பழுதாகி நிற்கும் வாகனத்தின் பின்புறம் 10 மீட்டர் இடைவெளியில் கண்டிப்பாக முக்கோண ரிஃப்ளெக்டர் வைப்பது, பேருந்துகளில் கட்டாய கதவு அமைப்பது, மணல் லாரி கள் மற்றும் கட்டுமானப் பொருட் களை ஏற்றிச்செல்லும் வாகனங் கள் பொருட்களை இறக்கியவுடன் வாகனத்தை கழுவிய பின்னரே சாலையில் இயக்கப்படவேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய நிபந்த னைகளை மோட்டார் வாகனத்துறை செயல்படுத்த வேண்டும்.
மேலும், பெட்ரோல் பங்க் எண்ணிக்கை உயர்ந்துவரும் அளவுக்கு ஏற்ப மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக எண் ணிக்கை, பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா, போக்குவரத்துக் காவல் பிரிவு விரிவு படுத்தப்பட்டுள்ளதா என்பதை அரசு ஆய்வு செய்யவேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
வேறு என்ன செய்யலாம்?
ஏதோ கடமைக்காக என நடத் தப்படும் சாலை பாதுகாப்பு வாரவிழாவை, போக்குவரத்துத் துறை மட்டுமல்லாமல் நெடுஞ் சாலைத் துறை, போக்குவரத்துப் போலீஸார் இணைந்து நடத்த வேண்டும். மேலும், பொங்கல் பண்டிகையின்போது நடத்தாமல் சாலை பாதுகாப்பு வாரவிழாவை வேறு தினங்களில் நடத்த அரசு முன்வரவேண்டும். சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஆண்டு முழுவதும் தொடர வேண்டும். இதற்காக, தற்போது தூய்மை இந்தியா போன்ற திட்டங்களுக்கு அரசு செலவிடும் தொகையில் 10 சதவீதத்தை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு பயன்படுத்த முன்வரலாம். 3 நிமிடத்தில் கவனம் ஈர்க்கும் விளம்பரப் படங்களைப் போல சாலை பாதுகாப்பு குறித்த விளம்பரங்களை, குறும்படங்களை தயாரித்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பலாம் என்கின்றனர் பொதுமக்கள்.