மழை காரணமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் 60 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. எனவே தடுப்பு பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேங்கி கிடக்கும் சுத்தமான நீரில் உற்பத்தியாகக்கூடிய ஏடிஸ் வகை கொசுக்கள் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. இவ்வகை கொசுக்களால் மதுரை மாநகரில் கடந்த 2012-ம் ஆண்டு 737 பேருக்கும், 2013-ம் ஆண்டில் 52 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறைந்திருந்தது. 14 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் நவம்பரில் பெய்த மழை காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்தது. இதனால் மதுரையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவத் தொடங்கியது.
இதையடுத்து மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் மேற்பார்வையில் 4 மண்டல உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், செவிலியர்கள் கொண்ட 50 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவர்கள் கடந்த ஆண்டு டெங்கு பாதித்த பகுதிகள், தற்போது பரவ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து அங்கு வீடுதோறும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கொசு உற்பத்தியைத் தடுக்க அபெட் மருந்து தெளித்தனர். தண்ணீர் தேங்கி கிடந்த வீடுகள், அடுக்குமாடி கட்டிடங்களுக்கு அபராதம் விதித்து சீல் வைக்கப்பட்டது. எனினும் நவம்பர், டிசம்பர் ஆகிய 2 மாதங்களில் மட்டும் 60 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து டெங்கு தடுப்பு பணிகள் தற்போது மீண்டும் துரிதப்பட்டுள்ளன.
இதுபற்றி மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் கூறியது: கடந்தாண்டு ஆரம்பத்தில் டெங்கு தடுப்பு பணிகளில் முழு கவனம் செலுத்தியதால் முதல் 10 மாதங்களில் 14 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நவம்பரில் பெய்த மழையால் இந்த எண்ணிக்கை 74 ஆக அதிகரித்தது. 2015-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே 3 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரமாக முழுமையாக கட்டுக்குள் வைத்துள்ளோம். இந்த நாள்களில் ஒருவருக்குக்கூட பாதிப்பு ஏற்படவில்லை. எனவே இனியும் பரவாமல் தடுப்பற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
ராஜபாளையத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர்
விருதுநகர்
ராஜபாளையத்தில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ராஜபாளையத்தில் தொடர்ந்து முகாமிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்.
ராஜபாளையம் 20, 21, 42 உள்ளிட்ட வார்டுகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, வீடாகச் சென்று வைரஸ் காய்ச்சல் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் பொருள்கள், தேவையற்ற பொருள்கள் உள்ளதா? என நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது, ‘‘ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 150 டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. புதிதாகக் காய்ச்சல் பரவுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை’’ என்றார்.