தமிழகம்

ஒபாமா வருகையை எதிர்த்து போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

ஒபாமாவின் வருகையை எதிர்த்து 26-ம் தேதி போராட்டம் நடத்த போலீ ஸார் அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட புதிய ஜனநாயக தொழி லாளர் முன்னணி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

போபால் விஷவாயு சம்பவத்துக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவன தலைவர் வாரன் ஆன்டர்ஸனை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா மறுத்தது. இதனால் அமெரிக்க அதிபர் இந்தியா வரும்போதெல்லாம் அவரது வருகையை எதிர்த்து தொழிலாளர் அமைப்புகள் போராட்டம் நடத்துவது வழக்கம். அதுபோலத்தான் இந்த முறையும் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி ஆகிய 3 நகரங்களில் போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி மறுக்கி றது. எனவே போலீஸார் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

உயர்நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம் இந்த வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்திய குடியரசு தினத்தையொட்டி பள்ளிகள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதனால், அந்த நாளில் இதுபோன்ற போராட் டங்களுக்கு போலீஸ் பந்தோபஸ்து கொடுப்பது சிரமம். எனவே போராட்ட அமைப்பாளர்கள், வேறொரு நாளில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம். அதன்படி மனுதாரர் கோரிக்கை விடுத்தால், அதை காவல்துறை சட்டப்படி பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT