தமிழகம்

தடைகளை தகர்த்து வெற்றி காணும் வாழ்க்கையே சுவாரஸ்யமானது: தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்

செய்திப்பிரிவு

சோதனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. தடைகளை தகர்த்து வெற்றி காணும் வாழ்க்கையே சுவாரஸ்யமானது என எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாளையொட்டி, கழக உறுப்பினர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், "எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்த நாளையொட்டி இந்த மடல் வாயிலாக, என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகள் அனைவரையும் தொடர்பு கொள்வதில் மிகுந்த மனநிறைவடைகிறேன்.

சோதனைகளும், துன்பங்களும் இல்லாத வாழ்க்கை இருக்கவே முடியாது. ஆனால், அந்த சோதனைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுவதே சிறப்புக்குரியது. எம்.ஜி.ஆரின் வாழ்வு சொல்லுகின்ற பாடமும் இதுதான்.

அண்ணாவின் சிந்தனையில் உதித்து, லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் வளர்ச்சி பெற்ற இயக்கத்தை, பல வகையான சூழ்ச்சிகளாலும், கொடிய நச்சு சிந்தனைகளாலும் தனக்கும், தன் குடும்பத்திற்குமான தனிப்பட்ட சொத்தாக்கிக் கொண்ட ஒரு தீய சக்தியை வீழ்த்தி, தமிழ் நாட்டிற்கு ஒரு புது அரசியல் பாதையை உருவாக்கித் தந்த வரலாற்றுப் பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர்.

அவருடைய தொலைநோக்கு சிந்தனையாலும், செயல் திறனாலும் உருவான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்திச் செல்லவும், எம்.ஜி.ஆரின் கனவுகளுக்கு ஏற்ப அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி எப்போதும் நடைபோட்டிடவும் பணியாற்றுகின்ற நல்வாய்ப்பு எனக்கு எம்.ஜி.ஆர். அளித்த பெருங்கொடை என்றே கூற வேண்டும்.

எம்.ஜி.ஆரை நாம் ஒவ்வொருவரும் உயிராக மதிக்கிறோம், உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம். இந்த அன்பை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை என்றென்றும் கட்டிக் காப்பாற்றும் மேன்மையான கடமை வாழ்வில் வெளிப்படுத்துவோம். அதுதான் எம்.ஜி.ஆருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்.

கழக அமைப்புத் தேர்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வேளையில், கண்ணியத்துடன் பணியாற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மேலும் வலுவுள்ளதாக ஆக்குவோம். எம்.ஜி.ஆரின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில், தொண்டர்களின் அரசியல் பணிகளும் அமைய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார் ஜெயலலிதா. அவரது மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றம் சிறப்பு அமர்வு முன் விசாரணையில் உள்ளது.

பல்வேறு சட்ட சிக்கல்களை சந்தித்து வரும் வேளையில், சோதனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. தடைகளை தகர்த்து வெற்றி காணும் வாழ்க்கையே சுவாரஸ்யமானது என அவர் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

SCROLL FOR NEXT