தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் 8 போக்குவரத்துக்கழகங்கள் உள்ளன. இவற்றில் ஓட்டுநர், நடத்துநர், தொழில் நுட்பப்பிரிவு ஊழியர் என மொத் தம் 1.43 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இதில், ஓட்டுநர்கள், நடத்துநர்கள்தான் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 1976 காவல்துறையில் முதல்முறையாக பல்வேறு பணிகளுக்கு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல், அரசு போக்குவரத்துத் துறையிலும் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். தற்போது தமிழக காவல் துறையில் மொத்தம் 17 ஆயிரம் பெண்கள் பணியாற்றுகின்றனர். ஆனால், அரசு போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துநர் பிரிவில் பெண்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கூட தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துநர் என சுமார் 4,500 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதற்கான நேர்காணல் பணிகளும் நடந்துவருகின்றன. இதில், தகுதியுள்ள பெண்களுக்குக் கூட வாய்ப்பு மறுக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக நடத்துநர் பணிக்காக நேர்காணலுக்கு சென்ற பெண்கள் சிலர் கூறியதாவது:
சமீபத்தில் போக்குவரத்துத் துறையில் மொத்தம் 4,500 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. நாங்களும் ஆர்வமாக நடத்துநர் பணிக்கு விண்ணப்பித்தோம்.
இதற்கான நேர்காணலுக்காக கடந்த வாரம் அயனாவரத்துக்கு சென்றோம். அங்கு எங்களை பார்த்த சில அதிகாரிகள், “பெண்களை நேரடியாக நியமிப்பது பற்றி எங்களுக்கு முழுமையான தகவல் தெரியவில்லை. நாங்கள் தலைமை அலுவலகத்தில் பேசிய பிறகு, உங்களை அழைக்கிறோம். பிறகு வந்து நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்” என்று கூறினர். சரியான கல்வி மற்றும் உடல் தகுதி இருந்தும் எங்களுக்கு பணி மறுப்பது ஏன் என்று தெரிய வில்லை. அப்படியென்றால், விளம்பரம் வெளியிடும்போதே பெண்களுக்கு வாய்ப்பு இல்லை என வெளிப்படையாக தெரிவித்திருக்கலாமே? இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது, ‘‘கல்வித் தகுதி, ஓட்டுநர், நடத்துநர் உரிமம் வைத்திருக்கும் தகுதியுள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மற்ற துறைகளை ஒப்பிடும்போது இந்த துறையில் பெண்கள் ஆர்வமாக வருவது குறைவாகத்தான் இருக்கிறது. பெண் பணியாளர்களில் சிலர் தொடக்கத்தில் ஓட்டுநர் அல்லது நடத்துநர் பணிக்கு ஆர்வத்துடன் சேருகிறார்கள். பின்னர் பணிச் சுமை, நடைமுறையில் உள்ள சிக்கல்கள் காரணமாக அலுவல் பணிக்கு மாற்றிக் கொண்டு செல்கிறார்கள். எனவே, எந்த விதத்திலும் பெண்களுக் கான வாய்ப்புகள் மறுக்கப்படுவ தில்லை. சம்பந்தப்பட்ட பெண்கள் அந்தந்தப் போக்குவரத்து தலைமை அலுவலகத்துக்கு புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
இது தொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜனிடம் கேட்டபோது, ‘‘தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட போக்குவரத்துக் கழகங்களில் பெண் ஒட்டுநர்கள், நடத்துநர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பெண் நடந்துநர் 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். மற்ற பணிகளை ஒப்பிடும்போது அதிக சிரமம் இருக்கிறது. இதனால், பெண்கள் அதிகம் பேர் ஆர்வமாக வருவதில்லை. மேலும், போதிய தகுதிகள் இருந்து வரும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்” என்றார்.