‘அமித் ஷாவின் தமிழக வருகை, வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும்’ என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங் களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. இதில் ஜார்க்கண்டில் பாஜக ஆட்சியை பிடிக்கிறது. காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை பாஜக பிடித்துள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் திரண்ட பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.
அப்போது பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சிக்கு சான்றளிக்கும் விதத்தில் ஜார்க்கண்ட் மாநில மக்கள் பாஜகவை வெற்றி பெறச் செய்துள்ளனர். மேலும், காஷ்மீரில் பாஜக 2-வது இடத்தை பிடித்துள்ளது. பாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷா பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் நடந்த தேர்தல்களில் பாஜக தோல்வியுறவே இல்லை. வட மாநிலங்களைபோல் தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமையும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அமித் ஷா தமிழகம் வந்து போனது மாற்றத்தை ஏற்படுத்தும்.
பாஜக மதமாற்றத்தை தூண்டுவதாகவும், அமித் ஷா சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவரா? என்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்புகிறார். பாஜக ஒருபோதும் மதமாற்றத்தை ஆதரித்ததில்லை. மேலும் நேரு வம்சத்தை சார்ந்தவர் என்பதால் ராகுல் காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் கிடையாது. ஊழல்வாதிகளுக்கும், ஊழலால் தண்டிக்கப்பட்டவர்களுக்கும் எங்களை விமர்சிக்கும் தகுதி கிடையாது.
மாநிலங்களில் பாஜக இந்தி திணிப்பில் ஈடுபடுவதாக திருமாவளவன் கூறுகிறார். இதுமாதிரியான செயல்களில் பாஜக ஈடுபடவில்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். ஜி.கே.வாசன் போன்றவர்கள் மக்கள் மத்தியில் மதவேற்றுமையை ஏற்படுத்தி அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.