தமிழகம்

காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டுக்கு கருணாநிதி மீண்டும் கண்டனம்

செய்திப்பிரிவு

காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டுத் திட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வஹ்த போது எதிர்ப்பு தெரிவித்த பாஜக இப்போது அதே முடிவை எடுப்து தவறான நடைமுறை என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய பா.ஜ.க. ஆட்சியில் அன்னிய முதலீட்டுக்கு அதிக வரவேற்புஅளிக்கப்படுகிறதே என்ற ஒரு கேள்விக்கு நான் பதிலளிக்கும்போது, “இன்சூரன்ஸ் துறையிலே, அன்னிய நேரடி முதலீட்டு அளவை, தற்போதுள்ள 26 சதவிகிதத்திலிருந்து 49 சதவிகிதமாக அதிகரிக்க, மத்திய பா.ஜ.க. அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் காரணமாக 25 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு, இன்சூரன்ஸ் துறைக்கு வருமென்று எதிர்பார்க்கப் படுகிறதாம். ஏற்கனவே இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலேயே இந்த முதலீட்டு வரம்பினை 49 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கான இன்சூரன்ஸ் திருத்த மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பா.ஜ.க. உட்பட பல அரசியல் கட்சிகளும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அப்போது அந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அப்போது இந்த முடிவினை எதிர்த்த பா.ஜ.க., தற்போது ஆளுங்கட்சியாக வந்தவுடன், அதே முடிவினை எடுத்திருப்பது தவறான நடைமுறையாகும். அன்னிய முதலீட்டுக்கு வரவேற்பு, அரசு நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்பனை, பாதுகாப்புத் துறைக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்வதற்குக் கூடத் தனியார் மயம் போன்ற நடவடிக்கைகள் பிற்போக்குத்தனமானவை மட்டுமல்ல;நமது பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்திடக் கூடியவை” என்று கருத்து தெரிவித்திருந்தேன்.

ஆனால் இந்தக் கருத்துக்கு மாறாக, அன்னிய மூலதனத்திற்கு கதவைத் திறந்து விடும் வகையில் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதனத்தை 26 சதவிகிதத்திலிருந்து 49 சதவிகிதமாக உயர்த்துவதற்கும், நிலக்கரி சுரங்கங்களை மீண்டும் தனியாருக்கு ஏலம் விடும் வகையிலும், மருத்துவ உப கரணத் துறையில் 100 சதவிகித அளவுக்கு அந்நிய மூலதனத்தை அனுமதிக்கும் வகையிலும் அவசரச் சட்டங்கள் பிறப்பிப்பது என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 24-12-2014 அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் இதற்குரிய மசோதாக்களுக்குஒப்புதல் பெற முடியாத நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்தவுடன், “அவசரச் சட்டம்” என்ற பெயரால் இதனை பா.ஜ.க. அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இவ்வாறு காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டு வரம்பை அதிகரிப்பதற்காக மத்திய அரசு கொண்டு வரும் அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் அவர்கள் தன்னுடைய அனுமதியினைத் தரக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் யெச்சூரி, எம்.பி., தெரிவித்திருக்கிறார். குடியரசுத் தலைவருக்கு இதுபற்றி கடிதமும் எழுதியிருக்கிறார்.

மாநிலங்களவையில் இன்சூரன்ஸ் சட்ட முன்வடிவை தெரிவுக் குழுபரிசீலனை செய்தது. அதன் அறிக்கை அவையிலே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆயினும் அதன் மீது இதுவரை விவாதம் எதுவும் நடைபெறவில்லை. அந்த வகையில் இது இப்போதும் அவையின் சொத்தாகத் தான் உள்ளது. அதன் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய முடிவு இன்னும் நிலுவையில் இருக்கும்போது, அதே பொருள் பற்றி அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டால், அது நாடாளுமன்றத்தின் புனிதத்துவத்தையே மீறுகின்ற செயலாக ஆகிவிடும்.

2008ஆம் ஆண்டு இந்த மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, 2011இல் நிலைக்குழு தனது அறிக்கையை அளித்த போது, “அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்த வேண்டாம்” என்பது நிலைக் குழுவின் தலைவராக பா.ஜ.க. வின் யஷ்வந்த் சின்கா உட்பட ஒட்டுமொத்த அனைவரின் கருத்தாக முன் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு யஷ்வந்த் சின்கா காரணம் கூறும்போது, “காப்பீட்டுத் துறையில் நான் தான் முதன் முதலாக தனியாரை அனுமதித்தேன். அதன் மூலமாக இந்தியாவுக்கு நிறைய அன்னிய நேரடி முதலீடு வரும் என்று நினைத்தேன். தனியார் வந்தால் கிராமப்புற மக்களுக்கு இன்ஷுரன்ஸ் வசதிகள் கிடைக்கும். சலுகை விலையில் காப்பீடு வரும் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் கடந்த 15 ஆண்டுகளில், தனியார் கம்பெனிகளால் நான் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை” என்று பா.ஜ.க.வின் யஷ்வந்த சின்கா அப்போது சொன்னார். ஆனால் அதே கட்சியின் ஆட்சியிலே எதிர்முறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலக அளவில் இந்தியா தான், அதிகமான தனிநபர் சேமிப்புகளைக் கொண்ட நாடு. நம் மக்களின் சேமிப்பு, பன்னாட்டு முதலாளிகளுக்கு மூலதன மாக மாறிவிடும். அவர்களுக்கு நெருக்கடி வந்தால், இந்தப் பணத்தை எடுத்துச் செல்ல மாட்டார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. குறிப்பாக இன்ஷுரன்ஸ் துறைக்கு அன்னிய முதலீடு தேவையே இல்லை. ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 450 கோடி ரூபாயை மின்சாரத் துறைக்கு முதலீட்டுத் தொகையாக எல்.ஐ.சி. தான் அளித்துள்ளது. தங்களது 10 ஆயிரம் கோடி ரூபாய்த் தேவைக்கு எல்.ஐ.சி.யையே நம்புவதாக இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவரே கூறியிருக்கிறார். இந்திய ரெயில்வே நிதிக் கழகத்தின் சொத்துகளில் எல்.ஐ.சி. பெரும் பங்குகளை முதலீடு செய்துள்ளது. இப்படி ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு ஜீவ ஊற்றாய் பொதுத் துறை இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் இருக்கும் போது அன்னிய முதலீட்டுக்காக மத்திய அரசு ஏன் அலைய வேண்டும்?

இந்த மசோதாவினை மாநிலங்களவையில் நிறைவேற்றிய மத்திய அரசுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில் மத்திய அரசு கொல்லைப்புற வழியாக அவசரச் சட்டம் கொண்டு வர முயலுவது நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கி விடும். எனவே இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் மத்திய அரசு கொண்டு வரும் இதற்கான அவசரச் சட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT