பச்சிளங்குழந்தைகளுக்கு அளிக் கப்படும் சிகிச்சையை பெற்றோர் நேரடியாக பார்க்கலாம் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவில் அமைக்கப்பட் டுள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் திரையின் இயக்கத்தை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படும் பச்சிளங்குழந்தை களுக்கான சிகிச்சை பிரிவில், 2013-ம் ஆண்டில் 1,071 குழந்தைகளுக்கும் 2014-ம் ஆண்டில் 1,275 குழந்தைகளுக்கும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 2014 ம் ஆண்டில் ஒரு கிலோவுக்கும் குறைவான 9 குழந்தைகளுக்கும், ஒரு கிலோ முதல் 1.5 வரை எடையுள்ள 46 குழந்தைகளுக்கும், 1.5 கிலோ முதல் 2.5 கிலோ வரை எடையுள்ள 506 குழந்தைகளுக்கும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இப்பிரிவில், பச்சிளங்குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவதை பொதுமக்களும், பெற்றோர்களும் நேரடியாக பார்க்கக் கூடிய வகையில் கண்காணிப்பு கேமரா மற்றும் திரை அமைக்கப்பட்டுள்ளது. திரையில், பச்சிளங்குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கும் முறைகளை பெற்றோர்களும், பொதுமக்களும் பார்ப்பதால், எந்த ஒரு சந்தேகத்துக்கும் இடமில்லாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் சார் ஆட்சியர் ராகுல்நாத், அரசு மருத்துவமனை இணை இயக்குநர்(சுகாதாரப் பணிகள்) மோகனன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.