சென்னையில் உள்ள துப்புரவுத் தொழிலாளர் தங்களுடைய குழந் தைகளுக்கு அரசின் கல்வி உதவித் தொகை மற்றும் சிறப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி கூறியுள்ளார்.
இது குறித்து நேற்று அவர் வெளி யிட்ட செய்தியில் கூறியிருப்பதா வது: துப்புரவு தொழில், கழிவு பொருள் சேகரிப்பு, தோல் உரிக்கும் தொழில் மற்றும் தோல் பதனிடும் தொழில் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தங்களுடைய குழந்தைகளின் கல்வி உதவித் தொகை மற்றும் சிறப்பு மானிய தொகை பெற விண்ணப்பம் செய்யலாம்.
கல்வி உதவித் தொகை திட்டத்தின்கீழ் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.700-ம், விடுதியில் தங்காமல் வீட்டில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.110-ம் வழங்கப்பட்டு வருகிறது.
சிறப்பு மானியத் தொகை திட்டத்தில் விடுதியில் தங்கி படிப் பவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஆயிரமும், விடுதியில் இல்லாமல் வீட்டில் இருந்து படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.750-ம் வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள் உதவித் தொகைக்கான விண்ணப்பத்தை பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல அலுவ லகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளரின் மேலொப்பம் (attestation) பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.