தமிழகம்

திருப்பதியில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: தமிழக தலைவர்கள் கண்டனம்

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் திருப்பதியில் ராஜபக்ச நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் மீது ஆந்திர காவல்துறை தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது என்று தமிழக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், "இலங்கை தமிழ் மக்களை கொன்று குவித்த சிங்கள இனவாத அரசின் அதிபர் ராஜபக்சே ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகைதந்தபோது, அச்செய்தியை சேகரிக்க பத்திரிக்கையாளர்கள் அங்கு சென்று இருந்தனர்.

அப்போது பத்திரிக்கையாளர்கள் மீது ஆந்திர மாநில காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளது. அத்தாக்குதலில் பத்திரிக்கையாளர்கள் காயமடைந்தும் அவர்களது கேமராக்கள் உடைக்கப்பட்டும் உள்ளது.

நியாயமான முறையிலும், சுதந்திரமாகவும், செய்தி சேகரிக்க முயன்ற பத்திரிக்கையாளர்களை தாக்கிய, ஆந்திர மாநில காவல்துறையை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

மேலும் பத்திரிக்கையாளர்களை அவர்களது கடமையை செய்யவிடாமல் தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும். இத்தாக்குதலில் காயமடைந்த பத்திரிக்கையாளர்களுக்கும், சேதமடைந்த கேமராக்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், இதில் சம்மந்தப்பட்ட காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஆந்திர மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராதமாஸ்:

"ராஜபக்சே வருகை மற்றும் போராட்டம் குறித்து செய்தி செகரிக்க தமிழக ஊடகங்களுக்கு முதலில் தடை விதிக்கப்பட்ட நிலையில், அதையும் மீறி தங்களின் கடமையை செய்தவர்கள் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

போர்க்களங்களில் கூட செய்தியாளர்கள் செய்தி செகரிக்க வசதி செய்து தரப்படும் நிலையில், எவ்வித காரணமும் இல்லாமல் தமிழக செய்தியாளர்களை தாக்கிய ஆந்திர காவல்துறையினரின் நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது ஆந்திர அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்:

"தமிழக பத்திரிகையாளர்கள் மீது ஆந்திர காவல்துறையினர் மிருக வெறித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது ஜனநாயக மாண்புகளுக்கு முரணானது மட்டுமல்ல, மிகப் பெரிய அநாகரிக செயலாகும்.

சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது ஆந்திர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்பட்ட சேதங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதுடன், தமிழக பத்திரிகையாளர்களுக்கு தனது வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

மனித நேயக் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா:

"கருப்புக்கொடி போராட்டத்தை படம் பிடித்து கொண்டிருந்த தமிழக தொலைக்காட்சி செய்தியாளர்கள், காணொளி பதிவாளர்கள் மற்றும் ஏனைய தமிழக பத்திரிக்கையாளர்கள் மீது ஆந்திர போலீசார் கொடூர தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர். செய்தியாளரின் கேமரா, மைக் போன்றவற்றையும் உடைத்து எறிந்துள்ளனர்.

ஒன்னரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்து விட்டு இன்று சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ராஜபக்சவிற்கு திருப்பதியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சந்திரபாபுவின் தெலுங்கு தேச அரசு. இதே நேரத்தில் ஜனநாயக ரீதியில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மதிமுகவினர் மீது காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியதுடன் அதனை செய்தியாக்கிக் கொண்டிருந்த தமிழக பத்திரிகையாளர்களையும் மோசமாக ஆந்திர மாநில காவல்துறையினர் தாக்கியுள்ளது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

பாஜகவின் ராஜபக்சே விசுவாசத்திற்கு தாங்களும் விசுவாசமாக இருக்கின்றோம் என்பதை சந்திரபாபு நாயுடு வெளிப்படுத்துவதற்காகவே ஒத்துமொத்த தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் திருப்பதியில் தமிழர்கள் மீது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்று கருதுகிறேன்" என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT