தமிழகம்

டாடா மேஜிக், அபே வாகனங்களை முறைப்படுத்த வேண்டும்: ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

‘டிக்கெட் வாகனங்களாக இயக்கப்படும் டாடா மேஜிக், அபே வாகனங்களை முறைப்படுத்த வேண்டும்’ என ஆட்டோ தொழிலாளர்கள் கோரியுள்ளனர்.

ஆட்டோக்களில் மீட்டர் போட்டு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கக் கோரி ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எல்பிஎப் உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 5 நாட்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அம்பத்தூரில் நேற்று இறுதிக்கட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ஆட்டோ ஓட்டுநர்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

முகாமில் கலந்துகொண்ட ஆட்டோ தொழிலாளர்கள் கூறும்போது, ‘‘அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் ஆட்டோக்களை இயக்க தயாராக உள்ளோம். ஆனால், டிக்கெட் வாகனங்களாக இயக்கப்படும் டாடா மேஜிக், அபே வாகனங்களை முறைப்படுத்த வேண்டும்’’ என வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன (ஏஐடியுசி) மாநில பொதுச் செயலாளர் சேஷசயனம் கூறியதாவது:

சமீபத்தில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைந்து வருவதால், தற்போது ஆட்டோவுக்கு கட்டணத்தை உயர்த்தித் தரவேண்டும் என கேட்கவில்லை. அரசு அறிவித்த ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர் வழங்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.

டிக்கெட் வாகனங்களாக இயக்கப்பட்டு வரும் டாடா மேஜிக், அபே போன்ற வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் என்பது ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

மீட்டர் போட்டு ஆட்டோவை ஓட்டக் கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 5 நாட்களில் சென்ட்ரல், எழும்பூர், பிராட்வே, வண்ணாரப்பேட்டை, வால்டாக்ஸ் ரோடு உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு முகாம் நடத்தியுள்ளோம். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டோ தொழிலாளியை கந்து வட்டிக்காரர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT