தமிழகம்

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியால் டிச.22-ல் ஆலை நுழையும் போராட்டம்: ‘பாக்ஸ்கான்’ தொழிலாளர்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

பாக்ஸ்கான் தொழிற்சாலை மூடுவது தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ‘டிச. 22-ம் தேதி முதல் தொழிலாளர்கள் பணிக்கு வர வேண்டாம்’ என தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்ததால், ஆலை நுழையும் போராட்டம் நடத்தவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சிப்காட்டில் உள்ளது செல்போன் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலை. இந்நிறுவனத்துக்கு, நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டு உற்பத் திக்கு செய்வதற்கான ஆர்டர்கள் வராததால், தொழிற்சாலை நஷ்டத் தில் இயங்குவதாக கூறி, வரும் 24-ம் தேதி முதல் தொழிற்சாலை யில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படும் என நிர்வாகம் அறிவித்தது. தொழிலாளர்கள் தொழிற்சாலையை மூட எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் தர்மசீலன் முன்னிலையில் கடந்த 12-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், உடன்பாடு எதுவும் ஏற்படாததால், 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் சிஐடியு, எல்பிஎஃப் ஆகிய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்ட னர். இந்தப் பேச்சுவார்த்தையில், ‘உடன்பாடு ஏற்படும் வரை தொழி லாளர்களுக்கு விடுமுறையுடன் கூடிய ஊதியம் வழங்கப்படும்’ என நிர்வாக தரப்பினர் தெரிவிக்க, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கங்கள், ‘தொழிற்சாலை வழக்கம் போல் செயல்பட வேண்டும். தொழிலாளர்களும் ஆலைக்கு வருவார்கள். வேலையிழப்பதை அவர்கள் விரும்பவில்லை’ என தெரிவித்தன. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாததால், மீண்டும் டிச. 26-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தர்மசீலன் அறிவித்தார்.

இதுகுறித்து, காஞ்சி மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துகுமார் கூறியதாவது: தொழிற்சாலை நிர்வாகம் செட்டில்மென்ட் தொடர்பாக பேசவே பேச்சு வார்த்தைக்கு வந்துள்ளனர். தொழிலாளர்களை வெளியில் அனுப்புவதில் தொழிற்சாலை நிர்வாகம் பிடிவாதமாக உள்ளது இதன் மூலம் தெரியவருகிறது. பேச்சுவார்த்தையின்போது, வரும் 22-ம் தேதி வழக்கம் போல் தொழிலாளர்கள் பணிக்கு வருவார்கள். அவர்களுக்கு வழக்கப் போல், சாப்பாடு மற்றும் பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால், தொழிற்சாலை நிர்வாகம் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், தொழிற்சாலைக்குள் நுழைந்து போராட்டம் நடத்த தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது என்றார்.

SCROLL FOR NEXT