தமிழகம்

அச்சுப்பணி முடியாததால் குடும்ப அட்டை உள்தாள் இணைப்புப் பணி தாமதம்: டிச.15 முதல் முழு வீச்சில் செயல்படுத்த முடிவு

செய்திப்பிரிவு

அச்சுப் பணி தாமதமாவதால் குடும்ப அட்டைகளுக்கு உள் தாள் இணைக்கும் பணி டிசம்பர் 15-ம் தேதி முதல் முழு வீச்சில் தொடங்கும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் துறையினர் தகவல் அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது, ஒரு கோடியே 98 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில் சுமார் 20 சதவீதத்துக்கு மேல் போலி எனத் தெரிய வந்துள்ளது. அவற்றை நீக்கி விட்டு ஆதார் பதிவில் முன்னணியில் உள்ள அரியலூர், பெரம்பலூர், மதுரை, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் முதற்கட்டமாக ஸ்மார்ட் கார்டுகள் உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் 39 கோடி ரூபாய் நிதியுதவியுடன், ஸ்மார்ட் கார்டு திட்டத்தை ரூ.318 கோடியில் நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்து 2015 இறுதியில், ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் விநியோகிப் பதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், டிசம்பர் மாதத்துடன் பழைய குடும்ப அட்டைகளுக்கான காலக் கெடு முடிகிறது. எனவே, குடும்ப அட்டை களை தொடர்ந்து 2015-ம் ஆண்டு டிசம்பர் வரை பயன்படுத்த தமிழக அரசு கால நீட்டிப்பு செய்துள்ளது.

இதன்படி, அனைத்து ரேஷன் கடைகளிலும், டிசம்பர் மாதம் பொருள்களை நுகர்வோர் வாங்கச் செல்லும் போது, ஒரு ஆண்டுக்கான புதிய உள் தாள்கள் இணைக்கப்படும் என்று கடந்த வாரம் அரசு அறிவித்தது.

ஆனால், டிசம்பர் 1-ம் தேதியான நேற்று ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கான உள்தாள்கள் இணைக்கப்படவில்லை.

இதுகுறித்து தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

குடும்ப அட்டைகளுக்கான உள்தாள்கள், அரசு அச்சகத்தில் அச்சிடும் பணிக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. அரசு அச்சகங்களில் புதிய ஆண்டுக்கான காலண்டர், டைரி, அரசுப் பணிக்கான எழுதும் ஏடுகள், பல்வேறு அரசு விண்ணப்பங்கள் ஆகியவை அச்சிடப்படுகின்றன. தற்போது சட்டசபை கூட்டம் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற் கான ஆவணங்கள் அச்சடிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

எனவே, திடீரென குடும்ப அட்டைக்கான உள்தாள் அச்சடிக்க முடியாது என்பதால் டிசம்பர் 15-க்குள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் படிப்படியாக அச்சிட்டு வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

எனவே, டிசம்பர் 15-ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட ரேஷன் கடைகளுக்கும் உள்தாள் கள் வழங்கப்பட்டு 15-ம் தேதி முதல் முழு வீச்சில் உள்தாள் ஒட்டும் பணி தொடங்கும். ஜனவரியில் நுகர்வோர் பொருட்கள் வாங்கச் செல்லும் போது கூட உள் தாள் இணைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT