தன்னை போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொண்ட ஒருவர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
யாருமில்லாத செம்மனஞ்சேரி பகுதியின் கிழக்குக் கடற்கரை சாலையில், திங்கட்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ ஆய்வு பாலியல் நடவடிக்கையை உறுதிபடுத்தியுள்ளதாக தெரிவித்த போலீஸார், பலாதகாரம் மற்றும் ஆள் கடத்தல் பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி கூறியதாவது:
"பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது ஆண் நண்பருடன் கடற்கரைக்கு சென்று விட்டு, அக்கரை சோதனைச் சாவடி அருகே காத்துக் கொண்டிருந்தனர். மாலை 4.30 மணி அளவில், வெள்ளை சட்டை, காக்கி பேன்ட் அணிந்த நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த இடத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, தன்னை போலீஸ் அதிகாரி என்று கூறிய அவர், அந்தப் பகுதி இன்ஸ்பெக்டர், ஒரு வழக்கு விசாரணைக்காக, அந்தப் பெண்ணை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக தன் பைக்கில் ஏற்றிய அவர், செம்மனஞ்சேரி காவல் நிலையத்தில் வந்து அந்தப் பெண்ணை அழைத்துச் செல்லுமாறு அவரது நண்பரிடம் கூறியுள்ளார்.
சந்தேகிக்கப்படும் நபர் தங்கச் சங்கிலி அணிந்திருந்ததாகவும், அந்தப் பெண்ணை, செம்மனஞ்சேரியில் ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்ற அவர், விசாரணை அதிகாரி அங்குதான் தங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். தன்னை கட்டிலில் கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
பிறகு வெளியே அழைத்து வந்து, பக்கத்திலிருக்கும் கடைக்காரரிடம், பேருந்தில் அந்தப் பெண்ணை அனுப்பிவைக்குமாறு சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு தனது நண்பருக்கு ஃபோன் செய்து நடந்ததை அந்தப் பெண் தெரிவித்துள்ளார்."
இருவரும் செம்மனஞ்சேரி காவல் நிலையத்திற்கு சென்று புகார் பதிவு செய்துள்ளனர். பிறகு வழக்கு நீலாங்கரை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணையின் போது, நடந்த சம்பவங்களைப் பற்றிய முரணான தகவல்களை அந்தப் பெண் தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, சந்தேகிக்கப்படும் நபர் சொன்னதைப் போல, தான் செம்மன்ஞ்சேரி காவல் நிலையத்திற்கு சென்றதாக ஆண் நண்பர் கூறினார். அங்கு அப்படி எந்த காவல் அதிகாரியும் வேலை செய்யவில்லை என்பதை அறிந்து கொண்ட அவர் அங்கிருந்து நீலாங்கரை காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கும் அப்படி யாரும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டார்.
இந்நிலையில் அக்கரை சோதனைச் சாவடியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சியில், பாதிக்கப்பட்ட பெண், ஒருவருடம் வண்டியில் பயணிப்பது பதிவாகியுள்ளது.