தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துணிந்து முடிவெடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதிமுக சார்பில் தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலர் வைகோ பங்கேற்று பேசியதாவது:
இந்திய அளவில் சாலை விபத்துகள் தமிழகத்தில்தான் அதிகமாக நடக்கிறது. இதற்கு அரசு மேற்கொள்ளும் மது விற்பனையே காரணம். திருப்பூரில் பெண் ஒருவர் மது அருந்திவிட்டு தாய்ப்பால் கொடுத்ததால், கைக்குழந்தை இறந்துள்ளது. தூய்மைக்கு தாய்ப்பாலை ஒப்பிடுவார்கள். தமிழகத்தில் தாய்ப்பாலும் நஞ்சாகிவிட்டது. தமிழகத்தில் குடிக்கும் வயது 12 என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்திய அரசியல் சாசன பிரிவு 47-ல் மதுவிலக்கை காக்க வேண்டியது அரசின் கடமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு நடத்தும் மது விற்பனை இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது. டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. பல லட்சம் குடும்பங்கள் அழிந்துகொண்டும் இருக்கிறது.
தமிழகத்தில் மக்களுக்கு குடிக்க நீர் இல்லை. ஆனால் மது வெள்ளமாக ஓடுகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கலாச்சார சீரழிவு அதிகரிக்கிறது. தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தாலும், அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தலைமையில்தான் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த ஜெயலலிதா துணிந்து முடிவெடுக்க வேண்டும்.
முதல்கட்டமாக டாஸ்மாக் கடை விற்பனை நேரம் மற்றும் நாட்களை குறைக்க வேண்டும். ஜெயலலிதா துணிந்து முடிவெடுத்து தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும்.
மாரத்தான் ஓட்டம்
மதுவிலக்கு கோரி, வரும் ஜனவரி 12-ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு மதுவிலக்கு விழிப்புணர்வு மாரத் தான் ஓட்டம் நடத்த இருக்கிறேன். மதுவின் கொடுமையை, அவர்கள் மூலமாக நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் நடவடிக்கை இது. இதே போன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படும்.
டெல்லியை விமர்சிப்பேன்
இது எனது கட்சியை வலுப் படுத்த இல்லை. எனது பயணத் தின்போது கட்சி கொடி, வண்ணம் எதையும் பயன்படுத்த மாட்டேன். அரசியலும் பேசமாட் டேன். ஆனால் டெல்லியை விமர்சிப்பேன். இது மக்கள் நலன் கருதி முழுக்க முழுக்க தமிழக பண்பாடு, நாகரீக சீரழிவை தடுப்பதற்காகத் தான் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யா, வடசென்னை மாவட்டச் செயலர் தீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.