தமிழகம்

இரு மாநிலப் பிரச்சினையால் முல்லை பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு: நதிநீர் ஆணையம் ஆலோசனை

ஹெச்.ஷேக் மைதீன்

முல்லை பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை யின் பாதுகாப்பை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், விரைவில் மத்திய பாதுகாப்புப் படையின் தென்மண்டல வீரர்கள் பாதுகாப்புக்கு அனுப்பப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமான இந்த அணை, கேரள வனத்துறை மற்றும் காவல்துறையின் பாதுகாப்பில், தமிழக பொதுப்பணித்துறையின் பராமரிப்பு மற்றும் இயக்கத்தில் உள்ளது. கேரள எதிர்ப்பை மீறி இந்த அணையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கேரள எம்.எல்.ஏ., பிஜுமோள், தமிழக பொதுப்பணித்துறையின் அனுமதியின்றி, கேரள போலீஸாரின் உதவியுடன் அணைப் பகுதியில் நுழைந்து, பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தார். அவர்களை தடுக்க முயன்ற தமிழக பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மாதவன், எல்.எல்.ஏ.,வுடன் வந்தவர்களால் தாக்கப்பட்டார். இதனால், தமிழக, கேரள எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, பெரியாறு அணைக்கு ஆய்வு செய்யச் சென்ற, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சவுந்தரம் மற்றும் உதவி பொறியாளர் அக்பர் ஆகியோரை கேரள வனம் மற்றும் காவல் துறையினர் தடுத்து, அனுமதி மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து அலுவலகம் திரும்பிய அதிகாரிகள் சென்னையிலுள்ள நீர் ஆதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு புகார் அனுப்பியுள்ளனர். அதில், முல்லை பெரியாறில் தினமும் பணிக்குச் செல்வது கடினமாக உள்ளதாகவும், கேரள அதிகாரிகள் தினமும் தடுத்து பிரச்சினை செய்வதாகவும் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பாக சென்னையி லுள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலக அதிகாரிகள் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர். பின்னர் நடந்த சம்பவங்களைக் கூறி, மத்திய நதி நீர் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும், மத்திய நதி நீர் ஆணைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, அணைக்கு விரைவில் மத்திய பாதுகாப்பு தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின்படி, அணைக்கு மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பைக் கேட்டுள்ளோம். இதற்கு மத்திய நீர் ஆணையம் முதற்கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய தொழிற் பாதுகாப்புப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவற்றில் எந்தப் படையை அணைப் பாதுகாப்புக்கு பயன்படுத்துவது என்று ஆலோசனை நடத்தப்படுகிறது. இதுகுறித்து சென்னையிலுள்ள சி.ஐ.எஸ்.எப்., மற்றும் ஐதராபாத் சி.ஆர்.பி.எப்., தென் மண்டல அதிகாரிகளுடன் மத்திய நீர் ஆணையத்தினர் ஆலோசனை நடத்தி முடிவு செய்வதாக தெரிவித்துள்ளனர். இன்னும் இரண்டு மாதங்களில் முல்லை பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு கிடைத்துவிடும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

SCROLL FOR NEXT