தமிழகம்

கடற்கரை - பூங்கா இடையே சிக்னல் கோளாறு: மின்சார ரயில்கள் திடீரென நிறுத்தம் - ரயில்களில் 2 மணிநேரம் காத்திருந்த மக்கள்

செய்திப்பிரிவு

சென்னை கடற்கரையில் இருந்து பூங்கா மற்றும் பூங்கா நகர் இடையிலான சிக்னல்கள் திடீரென செயலிழந்தன. இதனால் ரயில்களில் பயணிகள் 2 மணி நேரம் காத்திருந்தனர்.

மின்சார ரயில்கள் போக்குவரத்தை மேலாண்மை செய்யும் சிக்னல் கட்டுப்பாட்டு அறை கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ளது. இங்கு நேற்று காலை 11.45 மணி அளவில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், கடற்கரையில் இருந்து பூங்கா, கடற்கரையில் இருந்து பூங்கா நகர் (வேளச்சேரி மார்க்கம்) இடையே திடீரென சிக்னல்கள் செயலிழந்தன.

இதனால், கடற்கரைக்கு வர வேண்டிய தாம்பரம், செங்கல் பட்டு மின்சார ரயில்களும், வேளச்சேரியில் இருந்து வரும் பறக்கும் ரயில்களும் ஆங் காங்கே நிறுத்தப்பட்டன. இது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் செய்யப்படாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இளைஞர்கள் ரயில்களில் இருந்து இறங்கி சென்றுவிட்டனர். ஆனால் பெண்கள், முதியோர் வேறுவழியின்றி ரயில்களிலேயே இருந்தனர். காலை 11.45 மணிக்கு செயலிழந்த சிக்னல்கள், மதியம் 1.45 மணிக்கு சரிசெய்யப்பட்டது. அதன் பின்னரே மின்சார ரயில் சேவை சீரடைந்தது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பயணிகள் கூறும்போது, ‘‘சுமார் 11.30 மணி அளவில் திடீரென ரயில்கள் நிறுத்தப்பட்டன. எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. குழந்தைகளோடு வந்ததால் இறங்கியும் செல்ல முடியவில்லை. சுமார் 2 மணி நேரமாக ரயிலில் காத்துக் கொண்டு இருக்கிறோம். இனிவரும் காலங்களிலாவது மின்சார ரயிலில் கோளாறு, விபத்து கள் ஏற்படும்போது தகவல்களை தெரிவிக்கும் வகையில் ரயில் பெட்டிகளில் வசதியை ஏற்படுத்த வேண்டும்’’ என்றனர்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்த தும், பயணிகளுக்கு எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, தொழில்நுட்ப பிரிவினர் குழுவாக சென்று பிற்பகல் 1.13 மணிக்கு சிக்னல் கோளாறு சரிசெய்தனர். செங்கல்பட்டு, தாம்பரம் மின்சார ரயில்கள் பூங்கா வரை சிறிது நேரத்துக்கு இயக்கப்பட்டது. இதேபோல், வேளச்சேரியில் இருந்து வந்த ரயில்கள் பூங்கா நகர் வரை இயக்கப்பட்டன’’ என்றார்.

SCROLL FOR NEXT