தமிழகம்

ஆசிரியையிடம் கத்தி முனையில் கொள்ளை: கொள்ளையனை பிடிக்க தீவிரம் - தெளிவான படம் தயாராகிறது

செய்திப்பிரிவு

ஆசிரியையிடம் கத்தி முனையில் கொள்ளையடித்தவனின் தெளிவான படத்தை தயாரித்து அவனை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக இறங்கி யுள்ளனர். கொள்ளையனைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம்பேட்டை 10-வது தெருவில் வசிக்கும் வேலம் (39) என்ற ஆசிரியை, பள்ளி முடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது கத்தியை காட்டி மிரட்டி அவரிட மிருந்து 14 சவரன் நகைகளை ஒருவன் கொள்ளையடித்துச் சென்றான். கொள்ளை சம்பவம் அனைத்தையும் கல்லூரி மாணவி ஒருவர் தனது வீட்டு மாடியில் இருந்து செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் ‘வாட்ஸ் அப்’ மூலம் வேகமாக பரவி பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துரைப்பாக்கம் போலீஸார் இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 நிமிடம் 41 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் 4 இடங்களில் கொள்ளையனின் முழு முகமும் பதிவாகியுள்ளது. அந்த முகத்தை கம்ப்யூட்டர் மூலம் பெரிதுபடுத்தி, கொள்ளையனின் தெளிவான முகத்தை பெறுவதற்கு போலீஸார் முயற்சி எடுத்து வருகின்றனர்.

மேலும், கொள்ளையனை பிடிப்பதற்காக காவல் ஆய்வா ளர் சுரேஷ் மற்றும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. கொள்ளையனின் உருவ அமைப்பை ஒத்திருக்கும் சிலரை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையனின் தெளிவான முகம் கிடைத்ததும் தேடுதல் வேட்டை இன்னும் தீவிரப்படுத்தப்படும் என்று போலீஸார் தெரிவித்துள் ளனர்.

SCROLL FOR NEXT