கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, தேமுதிக கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
கடலூர் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் 12,47,644 பேர். இந்தத் தேர்தலில் புதிதாக 2.5 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதிபெற்றுள்ளனர். கடலூரில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் 6 வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 17 பேர் களத்தில் உள்ளனர்.
எனினும் திமுக, அதிமுக, தேமுதிக கட்சிகளுக்கு இடையில்தான் கடும் போட்டி நிலவுகிறது.
இங்கு 7 முறை காங்கிரஸூம் 4 முறை திமுக-வும் தலா ஒரு முறை தமாகா, அதிமுக, டிஎன்டி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஆகியோர் வென்றுள்ளனர். தற்போதைய எம்.பி-யான கே.எஸ்.அழகிரிதான் இப்போது இங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவர், கடந்தமுறை 23,532 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சம்பத்தை வீழ்த்தியவர். அப்போது, தேமுதிக இங்கு 1 லட்சத்து 8 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது.
வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கடலூரில், அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் இம்மூன்று கட்சிகளுமே வன்னியர்களையே களமிறக்கியுள்ளன. தேமுதிக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். கடலூரைப் பொறுத்தவரை வன்னியர்கள் திராவிடக் கட்சிகளிலும் காங்கிரஸிலும் ஐக்கியமாகிக் கிடப்பதால் இங்கு வன்னியர்கள் மத்தியில் பாமக-வுக்கு செல்வாக்கு குறைவு. கடந்த 3 மக்களவைத் தேர்தல்களிலும் இங்கு வன்னியரல்லாதவர்களே வெற்றி பெற்றுள்ளனர். எனவே இங்கு சாதியைவிட கட்சியும் கூட்டணியுமே வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கின்றன.
கடந்த தேர்தலில் அதிமுக-வுடன் இருந்த பாமக, மதிமுக கட்சிகள் இப்போது பாஜக அணியில் இருப்பது தேமுதிக-வுக்குக் கூடுதல் பலம் சேர்ப்பதுடன் அதிமுக-வுக்கு சரிவையும் ஏற்படுத்தும். அதேசமயம், அதிமுக-வை விட குறைவான வாக்கு வங்கியைக் கொண்ட திமுக-வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சிறுபான்மையினர் கைகொடுக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் வேட்பாளர் கு.பாலசுப்ரமணியனுக்கு விழும் வாக்குகளும் திமுக-வுக்கு சாதகமான நிலையை உண்டாக்கும். இதையெல்லாம் கணக்கில் வைத்து, கடைசி நேரத்தில் 5 லட்சம் வாக்காளர்களுக்கு ’சிறப்பு கவனிப்பு’களை செய்யும் திட்டத்துடன் காத்திருக்கிறது அதிமுக.