தமிழகம்

விதிமீறல் நடந்திருந்தால் அதிகாரிகளையும் சேர்த்து கூடுதல் குற்றப் பத்திரிகை: மவுலிவாக்கம் வழக்கில் உத்தரவு

செய்திப்பிரிவு

மவுலிவாக்கம் கட்டிட விபத்து விவகாரத்தில், அசல் திட்ட வரைபடத்தில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை குற்றம் சாட்டப் பட்டவர்களாக சேர்த்து கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் 61 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந் தனர். இந்த சம்பவத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரி களுக்கு தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். சிபிஐ விசாரணை கோரி டிராபிக் ராமசாமியும் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்துக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மவுலிவாக்கத்தில் கட்டிட விபத்து நடந்த இடத்தில் உள்ள மற்றொரு அடுக்குமாடி கட்டிடத்தை இடிக்குமாறு அரசு உத்தரவிட்டதை எதிர்த்து அந்த கட்டிட உரிமையாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை இந்த வழக்குடன் சேர்க்கிறோம்.

இந்த வழக்கு தொடர்பாக அரசு நியமித்த நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. அசல் திட்ட வரைபடத்தில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் அந்த அதிகாரிகளை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்த்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அதன் நகலை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT