முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க விசாரணை அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சியை சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. இவரது சகோதரர் ராமஜெயம். கடந்த 22.3.2012-ல் வீட்டிலிருந்து நடைபயிற்சிக்கு சென்ற ராமஜெயம், சர்க்கார் பாளையம் சாலையில் காவிரி ஆற்றின் ஓரத்தில் கொலை செய் யப்பட்டு கிடந்தார். ராமஜெயம் கொலை குறித்து சிபிசிஐடி போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸாரிடம் இருந்து சிபிஐக்கு மாற்றக்கோரி ராமஜெயத்தின் மனைவி லதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், என் கணவர் கொலை வழக்கு 22.6.2012 அன்று சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணை மாற் றப்பட்டு 32 மாதங்கள் ஆகியும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும், வழக் கின் போக்கு குறித்து ஊடகங் களுக்கு போலீஸாரால் தகவல் தெரிவிக்கப்படுகின்றன. என் கணவரின் நடத்தை தொடர்பான தகவல்களை தெரிவித்து வருகின்றனர். எங்கள் குடும்பத் தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, முக்கிய தகவல் கள் தெரிவித்தோம். அதன் பிறகும் போலீஸார் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் உள்ளனர்.
கொலையில் ஈடுபட்ட உண் மையான குற்றவாளிகளையும், கொலைக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டவர்களையும் அரசியல் நிர்பந்தம் காரணமாக சிபிசிஐடி போலீஸார் விசாரிக் காமல் உள்ளனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் விசாரித் தால் நியாயம் கிடைக்காது. எனவே, வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.மாலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ராமஜெயம் கொலை வழக்கின் தற்போதைய நிலை குறித்து விசாரணை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.