தமிழகம்

எளியோருக்கும் நீதி கிடைக்க போராடியவர் கிருஷ்ணய்யர்: நினைவஞ்சலிக் கூட்டத்தில் முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேச்சு

செய்திப்பிரிவு

தனது வாழ்நாளின் மிகப் பெரிய கடமையாக சாதாரண எளிய மக்களுக்கும் நீதி கிடைக்க போராடியவர் நீதிபதி கிருஷ்ணய்யர் என்று அவரின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறினார்.

சென்னை கேரள சமாஜம் சார்பில் நடைபெற்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் நினைவஞ்சலிக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசும்போது, “கிருஷ்ணய்யர் வழக்கறிஞராக இருந்தபோது, கேரள மாநிலத்தின் மலபார் பகுதியிலுள்ள சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பத்தினருக்காக நீதி கேட்டுப் போராடினார். மக்களுக்காக போராடியதற்காக 30 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அப்போதுதான் சிறைச்சாலையின் செயல்பாடுகளை நேரில் கண்டார். இடதுசாரி இயக்கங்களின் ஆதரவோடு சுயேச்சையாய் நின்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். மலபார் கேரளத்தோடு இணைந்த பிறகு, கேரளத்தில் இ.எம்.எஸ்.ஸின் மந்திரி சபையில் அமைச்சராக பொறுப்பேற்று, மக்கள் பணியைத் தொடர்ந்தார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கியவர்

கிருஷ்ணய்யரிடம் பலரும் ‘நீங்கள் நீதிபதி ஆக வேண்டும்’என்று சொன்னபோது, ‘ஒரு கம்யூனிஸ்ட் நீதிபதியானால் மக்களுக்கு என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டார். ஆனாலும், மிக குறைவான காலத்திலேயே அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற பிறகு, பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கினார். தனது பணி ஓய்வுக்குப் பின்னும், சாதாரண மக்களுக்கும் சட்டத்தின் வழியே நீதி கிடைத்திட வழிவகை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அவரால்தான் ‘சட்ட உதவி மையம்’ சென்னையில் தொடங்கப்பட்டது’’ என்றார்.

இக்கூட்டத்தில், சென்னை கேரள சமாஜத்தின் தலைவர் டாக்டர் டி.எம்.ஆர். பணிக்கர், பொதுச் செயலாளர் ஆர்.கே.தரன், கே.கிருஷ்ணன், ஸ்டான்லி ஜோனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT