போலி ஆவணங்களை தயாரித்து, கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது சகாயம் ஆய்வில் அம்பலமானது. விதிகளை மீறி புராதன மலைகளை அறுத்தும், குவாரி கழிவுகளைக் கொட்டி கண்மாய்களை மேடாக்கியவர்கள் மீது அரசுத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை அறிந்த சகாயம் வேதனையை வெளிப்படுத்தினார்.
நீதிமன்ற உத்தரவின்பேரில், கிரானைட் குவாரி மோசடிகளை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரித்து வருகிறார். நேற்று இரண்டாவது நாளாக குவாரிகளால் ஏற்பட்ட சீரழிவுகளை சகாயம் தனது குழுவினருடன் நேரில் ஆய்வு செய்தார். மேலூர் அருகேயுள்ள அரிட்டாபட்டியில் உள்ள எழுமலை, கீழவளவு பஞ்சபாண்டவர் மலை மற்றும் புராதனச் சின்னங்கள், கண்மாய்கள், விளைநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் விசாரணை நடத்தினார். இதில் பலரும் தெரிவித்த தகவல்களால் சகாயம் அதிர்ச்சி அடைந்தார்.
போலி உத்தரவால் மலையை அறுத்த கொடுமை
அரிட்டாபட்டி மலையில் ‘ராயல் ரெட்’ எனப்படும் விலை உயர்ந்த இத்தாலி நாட்டினர் விரும்பும் கிரானைட் இருந்தது பிஆர்பி நிறுவனத்தாருக்கு தெரியவந்தது. இங்கு 7 மலைகள், சமணர் படுகை, தமிழ் பிராமி கல்வெட்டு, பாண்டியர் குடைவறைக் கோயில், தமிழ் வட்டெழுத்துகள், 23-ம் தீர்த்தங்கரர் சிலை, மகாவர்மன் சிலை உள்ளிட்ட கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16-ம் நூற்றாண்டு வரையிலான புராதனச் சின்னங்கள் ஆங்காங்கே உள்ளன. தமிழகத்தில் சிவன் மனித வடிவில் இலகுலீசர் சிலையாக இங்கு மட்டுமே உள்ளதாகவும் வரலாற்று சான்றுகள் உள்ளன. இவ்வளவு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மலையை உடைத்து, கிரானைட் கற்களை எடுக்க அனுமதித்து 2008-ல் அரசே உத்தரவிட்டது. இதற்கு வருவாய், தொல்லியல், பொதுப்பணி, வேளாண்மை, சுரங்கத்துறை அனுமதி வழங்கியுள்ளது. கிராமப் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை. ஆனால், தீர்மானம் நிறைவேற்றியதாக போலி ஆவணங்களைத் தயாரித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
மேலூர் அருகே கீழையூர், கீழவளவு கிராமங்களுக்கிடையே உள்ளது பஞ்சபாண்டவர் மலை. இந்த மலையின் ஒரு பகுதியை கிரானைட் நிறுவனங்கள் அறுத்து விற்றுவிட்டன. இம் மலைக்கு அருகேயிருந்த பல குன்றுகள் இருந்த இடம் தெரியா மல் சிதைக்கப்பட்டுவிட்டன. இப் பகுதியிலுள்ள 42 கண்மாய்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை கிரானைட் கழிவுகளை கொட்டி மேடாக்கப்பட்டுவிட்டன.
கிராமக் கணக்குகளில் பஞ்ச பாண்டவர் என்ற ஒரு மலையே இல்லை என்பதை அறிந்த சகாயம் அதிர்ச்சியில் உறைந்தார். பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் இந்த மலை எப்படி கணக்கில் இல்லாமல் போகலாம் எனக் கேட்டதற்கு யாருமே பதில் அளிக்கவில்லை.
இதையெல்லாம் பதிவு செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றார் சகாயம்.