தமிழகம்

இருக்கை வசதி ஏற்படுத்தித் தராததால் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை: கருணாநிதி

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில், தனக்கென்று தனியாக இருக்கை வசதி ஏற்படுத்தித் தராததால் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பேரவை கூடியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, சட்டப்பேரவைக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி பேரவை குறிப்பில் கையெழுத்திட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: ""இன்று தொடங்குகின்ற சட்டப் பேரவையில் பங்கு பெறுவதற்காகவும், செய்தியாளர்களைச் சந்திப்பதற்காகவும் இங்கே வந்தேன். வரும்போதே இன்றுள்ள சூழ்நிலைகள் குறித்து உங்களிடம் கூறுவதற்காக ஓர் அறிக்கையையும் தயாரித்து வந்திருக்கிறேன். அந்த அறிக்கை தற்போது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு பன்னீர்செல்வம் அவர்கள் ஓர் அறிக்கை விடுத்திருந்தார். அந்த அறிக்கையை நம்பி நான் இன்றைக்கு வந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தவாறு, என்னைப் போன்ற உடல் நலம் இல்லாதவர்களுக்கு; ஊனமுற்றவர்களுக்குச் செய்து தருகின்ற வசதிகளைக் கூட, எதையும் செய்து தரவில்லை.

டெல்லி போன்ற இடங்களில் மாநிலங்களவையிலே கூட, உடல் நலம் இல்லாதவர்களுக்கு தனி இருக்கையே ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இருக்கையிலே உடல் நலம் இல்லாதவர்கள் கலந்து கொண்ட காட்சிகளை நான் நேரிலேயே கண்டவன். அதைப் போன்ற ஏற்பாடுகள், வசதிகள் செய்து தரப்பட்டிருக்கும் என்று நம்பித் தான் இங்கே வந்தேன்.

ஆனால் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. மாறாக நான் வெளியே போனால் போதும் என்ற நிலையில் அவர்கள் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது வேதனைப்படுகிறேன்.

சுமார் ஐம்பது ஆண்டு காலம் சட்டப் பேரவையிலே விவாதங்களில் கலந்து கொண்டு உரை யாற்றியவன் நான். அதுவும் 50 ஆண்டு காலத்தில் தொடர்ந்து தேர்தலில் பங்கேற்று ஒரு முறை கூட தோல்வி ஏற்படாமல், தொய்வில்லாத நிலையில் அவையில் பங்கேற்றிருக்கிறேன்.

சட்டப் பேரவைக் கடமைகளை நான் ஆற்றி யிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு நான் அந்தக் கடமைகளை நிறைவேற்ற முடியாமல், குறிப்பாக என்னுடைய நீண்ட கால நண்பரும், இன்றைய முதல் அமைச்சருமான பன்னீர்செல்வம் அவர்கள் பகிரங்கமாக என்னை அழைத்த காரணத்தால், அவர் அழைப்பு விடுத்ததை நம்பி நான் இங்கே வந்தேன். வந்த இடத்தில் எந்த அளவுக்கு மரியாதை தரப்பட்டுள்ளது என்பதை நீங்களே பார்க்கிறீர்கள்.

என்னை வரவேற்பதற்கு ரத, கஜ, துரக, பதாதிகள் எல்லாம் வர வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் அமர்ந்து பேச இடம் கொடுத்தால் போதும் என்ற நிலையிலே தான் வந்தேன். அவைக்குள் செல்லவே முடியாத நிலை தான் உள்ளது. எனக்கு என்று குறைந்த பட்சம் தனியாக ஒரு நாற்காலியை ஏற்பாடு செய்திருப்பார்கள் என்று நம்பித் தான் வந்தேன். அப்படி எதுவும் போடப்படவில்லை. எனவே நான் அவையிலே கலந்து கொள்வதை அவர்கள் விரும்பவில்லை என்பதைத் தற்போது புரிந்து கொண்டேன் என்பதை உங்களிடம் கூறி, என்னுடைய ஆதங்கத்தையும் தெரிவித்து வீட்டுக்குத் திரும்புகிறேன்.

தமிழகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பற்றி உங்களுக்கு என்னுடைய அறிக்கை தரப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் படித்தாலே போதுமானது. இதைத் தவிர வேறு எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை. ஏன் வந்தேன்? ஏன் திரும்புகிறேன் என்று கேட்டால், வந்தேன், திரும்புகிறேன், திரும்புவதற்குக் காரணம் எனக்கு உள்ளே அமர்ந்து பணியாற்ற எந்த வசதியும் - நான் பல முறை கேட்டுக் கொண்டும் கூட, பத்திரிகைகள் வாயிலாக தெரிவித்தும் கூட, வாருங்கள் என்று முதலமைச்சர் பன்னீர்செல்வம் வெளிப்படையாக அழைத்தும் கூட, அதை நம்பி இங்கே வந்தால் எந்த ஏற்பாடோ, வசதியோ செய்து தரப்படவில்லை. எனவே அந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்து தரப்படுகின்ற நேரத்தில் இங்கே வரலாம் என்ற ஆதங்கத்தோடு உங்களிட மிருந்து இப்போது விடைபெற்றுக் கொள்கிறேன்" இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

சட்டப்பேரவைக்கு வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

SCROLL FOR NEXT