காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1073 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 116 உயர்நிலைப் பள்ளிகளும், 95 மேல்நிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் பாழடைந்துவிட்ட நிலையில், மாணவர்களின் பாது காப்பை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
அதேநேரம் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டிடங்கள் அந்தந்த பள்ளி வளாகங்களில் இடிக்கப்படாமலேயே உள்ளன. அக்கட்டிடங்கள் மாணவர்கள் மீது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற அபாய நிலையில் உள்ளன. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பாழடைந்த அரசுப் பள்ளிக் கட்டிடங்களை இடிக்குமாறு ஆட்சியர் உத்தர விட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் சாந்தி கூறியதாவது: ‘ஆட்சியர் உத்தர வின்பேரில் மாவட்டத்தில் பாழடைந்த பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்தினோம். அதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பாழடைந்த கட்டிடங்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறோம்’ என்றார்.
மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம் கூறியதாவது: ‘மாமல்லபுரத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு நடத்தியபோது, பாழடைந்து, பயன்பாடற்ற பள்ளிக் கட்டிடம் இருப்பதை அறிந்தேன். அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் அக்கட்டிடத்தை இடிக்குமாறு கோரிக்கை வைத்தனர். மாணவர் கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அக்கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டிருந்தேன்.
மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இதுபோன்ற பாழடைந்த கட்டிடங்கள் எத்தனை உள்ளன என்பதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டிருந்தேன். அவர் அளித்த அறிக்கையின்படி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள கட்டிடங்களை இடிக்க அவ்வலுவலகங்களுக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பாழடைந்த கட்டிடங்களை இடிக்க பொதுப்பணித் துறைக்கும் உத்தர விட்டிருக்கிறேன்’ என்று அவர் கூறினார்.