தமிழகம்

வேலை நிறுத்தத்தை தவிர்க்க போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரண தொகை வழங்க அரசு முடிவு?

செய்திப்பிரிவு

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தவிர்க்க தமிழக அரசு இடைக்கால நிவாரணத் தொகை வழங்கவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு சட்டப்பேரவையில் இன்று வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

தமிழக அரசு போக்குவரத்து துறையின் கீழ், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப அலுவலர் உட்பட மொத்தம் 1.43 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதிய ஒப்பந்தம் செய்யப்படுகிறது. கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி 11-வது ஊதிய ஒப்பந்தம் செய்யப்பட்டது.

3 ஆண்டுகள் முடிந்தும் புதிய ஊதிய ஒப்பந்தம் செய்யப்படாததால், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உட்பட மொத்தம் 10 தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன. வரும் 19-ம் தேதி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களை சமாளிக்கும் வகையில், தற்போது இடைக் கால நிவாரண தொகை வழங்கவுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘இதுவரையில் இது தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் தெரியாது. எதுவாக இருந்தாலும் அரசு தான் அறிவிக்க வேண்டும்’’ என்றனர்.

இது தொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜனிடம் கேட்டபோது, ‘‘போக்குவரத்து ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாக தொழிலாளர்கள் மத்தியில் தகவல்கள் பரவியுள்ளது. எனவே, இடைக்கால நிவாரணம் வழங்குவது பற்றி எதுவாக இருந்தாலும், தொழிற்சங்கங்களுடன் ஆலோசித்த பின்னரே அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

சிஐடியு துணைத் தலைவர் சந்திரனிடம் கேட்டபோது, ‘‘புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். அப்படி, இடைக்கால நிவாரண தொகை அறிவிக்க அரசு முயற்சித்தாலும், தொழிற் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடக்க வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT