தமிழகம்

பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி உயர்வை திரும்பப் பெறுக: ராமதாஸ்

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி உயர்வை ரத்து செய்வதுடன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை எந்த அளவுக்கு குறைந்திருக்கிறதோ, அதற்கு இணையாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை மறு நிர்ணயம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்துயுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ஒரு ரூபாயும், டீசல் மீது 2.25 ரூபாயும் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படாமல் இருக்க கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல் விலை 31 ரூபாயும், டீசல் விலை 30 ரூபாயும் உயர்த்தப்பட்டன. இப்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் அதனால் கிடைக்கும் லாபத்தை நுகர்வோருக்கு பகிர்ந்தளிப்பது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும். ஆனால், மத்திய அரசோ, கலால் வரி உயர்வு என்ற பெயரில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயனை தட்டிப் பறித்துக் கொண்டிருக்கிறது.

சாதாரண நேரத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தினால், அவற்றின் விலை உயர்ந்து மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து, கச்சா எண்ணெய் விலை குறைந்த நேரத்தில் எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கு பதிலாக, குறைக்க வேண்டிய தொகையை வரியாக எடுத்துக் கொள்வது என்பது ஒருவர் உறங்கும் நேரத்தில் அவருக்கே தெரியாமல் பணத்தை பறிப்பதற்கு இணையான நயவஞ்சக, மனிதநேயமற்ற செயலாகும்.

கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் கடந்த ஒன்றாம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 91 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 84 பைசாவும் மட்டுமே பெயரளவில் குறைத்த மத்திய அரசு, மீதமுள்ள தொகையை வரி என்ற பெயரில் அரசின் கருவூலத்திற்கு கொண்டு சென்று விட்டது. கடந்த நவம்பர் 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலைக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எரிபொருட்களின் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ1.50 உயர்த்தியதன் மூலம் கச்சா எண்ணெய் விலை குறைவின் பயன் மக்களுக்கு கிடைக்காமல் மத்திய அரசு தடுத்து விட்டது. கடந்த 3 வாரங்களில் அடுத்தடுத்து இரண்டு முறை கலால் வரியை உயர்த்தியதன் மூலம் மொத்தம் ரூ. 21,000 கோடி வரிச் சுமையை அப்பாவி மக்கள் மீது நரேந்திர மோடி அரசு சுமத்தியிருக்கிறது.

நாட்டின் நிதிப்பற்றாக்குறையை சமாளிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க வேண்டுமானால், பெரிய தொழில்நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்கலாம்; அரசின் செலவுகளை கட்டுப்படுத்தலாம். அதைவிடுத்து உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.1.25 லட்சம் கோடியை அப்படியே முடக்கி வைப்பதும், ஊரக வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் போன்ற சமூகத்துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ.40 ஆயிரம் கோடியை குறைப்பதும் நீண்டகால வளர்ச்சிக்கு வழிவகுப்பதல்ல. இந்த நடவடிக்கைகள் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும், ஏழை எளிய மக்களுக்கு பாதகமாகவும் தான் அமையும் என்பதை மத்திய ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

எனவே, எரிபொருட்கள் மீதான கலால் வரி உயர்வை ரத்து செய்வதுடன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை எந்த அளவுக்கு குறைந்திருக்கிறதோ, அதற்கு இணையாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை மறு நிர்ணயம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT