அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தக் கோரி டிசம்பர் 19-ல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று சிஐடியு மாநில தலைவரும் எம்எல்ஏவுமான சவுந்தரராஜன் தெரிவித்தார்.
அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 12-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தக் கோரி, திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நேற்று நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறியபோது, “அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் 15 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளன. ஆனால், தமிழக அரசும், போக்குவரத்துக் கழக நிர்வாகங்களும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை” என்றார்.
தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை பொதுச் செயலாளர் கி.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், “அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பு குறித்த நோட்டீஸ் அனைத்து சங்கங்களின் சார்பில் டிசம்பர் 5-ம் தேதி தமிழக அரசிடம் அளிக்கப்படும். ஓய்வு பெற்றோர் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை வழங்க வலியுறுத்தி டிசம்பர் 12-ல் மண்டல தலைமை அலுவலகங்கள் முன்பு திரண்டு முறையீடு செய்யப்படும். டிசம்பர் 19 வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட டிசம்பர் 15-ல் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் தொமுச பொதுச் செயலாளர் டி.பாரதிதாசன் வரவேற்றார். சிஐடியு சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் முன்னிலை வகித்தார். சிஐடியு பொதுச் செயலாளர் சிவானந்தம் நன்றி கூறினார். மாநாட்டில் அதிமுகவைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளின் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
முன்னதாக மலைக்கோட்டை கிளை பணிமனை அருகே தொடங்கி உழவர் சந்தை வரை பேரணி நடைபெற்றது.
தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டுக்கு வந்திருந்த தேமுதிக போக்குவரத்துக் கழக தொழிற்சங்கப் பிரிவு பொருளாளர் சென்னையைச் சேர்ந்த துபாய் ரவி, திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிகொண்டு மேடை அருகே வந்து தீக்குளிக்க முயன்றார். அருகிலிருந்தவர்கள் அவரது முயற்சியைத் தடுத்தனர். இதனால், மாநாட்டுத் திடலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.