கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோரில் சிலர், அதிக இழப்பீடு கேட்டு விசாரணை ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு கூடுதலாக இழப்பீட்டுத் தொகை வழங்குவது பற்றி பரிந்துரை செய்வதற்காக ஒரு நபர் ஆணையத்தை உயர் நீதிமன்றம் அமைத்தது. ஓய்வுபெற்ற நீதியரசர் கே.வெங்கட்ராமன் தலைமையிலான இந்த ஆணையம், கடந்த நவம்பர் 12-ம் தேதி முதல் தனது பணிகளைத் தொடங்கியது.
முதல்கட்டமாக, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் இழப்பீட்டுத் தொகை கோரி டிசம்பர் 5-ம் தேதி அல்லது அதற்கு முன்பாக கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என்று கடந்த மாதத்தில் ஆணையம் அறிவித்தது. அதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் சார்பில், ஆணையத்திடம் நேற்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் தமிழரசன் கூறும்போது, ‘‘பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தரப்பில் முழு விவரங்களுடன் கூடிய ஆவணங்களை தயார் செய்துவருகிறோம். அதை விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பித்தோம். தலா ரூ.35 லட்சம் இழப்பீடு கேட்க இருக்கிறோம்’’ என்றார்.