கோடம்பாக்கம் மேம்பாலம் வரும் டிசம்பர் 24-ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. கனரக வாகனங்கள் ஜனவரி மாதம் முதல் மேம்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படும்.
கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டன. போக்கு வரத்து மாற்றத்தின் காரணமாக ஏற்படும் நெரிசலை குறைக்க, சீரமைப்பு பணிகள் முடிக்கப் பெறாமலே ஜூலை மாத இறுதியில் போக்குவரத்து காவல்துறையினர் மேம்பாலத்தில் இரு வழி போக்குவரத்தை அனு மதித்தனர். இதனால் பணிகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் நவம்பர் 18-ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, சீரமைப்பு பணிகள் தொடர்ந்தன.
மேம்பாலத்தில் புதிய எல்.இ.டி.விளக்குகள் அமைப்பது, வடங்களின் இடையூறு இல்லாத நடைபாதை அமைப்பது, புதிய கைப்பிடிகள் அமைப்பது, நான்கு படிக்கட்டுகள் அமைப்பது, மேம் பாலத்துக்கு வண்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்தப் பணிகள் டிசம்பர் 24-ம் தேதிக்குள் முடிவுபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து டிசம்பர் 24ம் தேதி கோடம்பாக்கம் மேம்பாலம் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
“ஜனவரி மாதம் முதல் இந்த மேம்பாலத்தில் கன ரக வாகனங்களும் செல்லலாம். அதன் பிறகு, மேம்பாலத்தின் வெளிப்புறத்தில் வண்ணம் பூசப்படும்.
மார்ச் மாத இறுதிக்குள் மேம்பாலம் முழுமையாக தயாராகி விடும்” என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.