தமிழகம்

புதிய ஆட்டோ பர்மிட் வழங்குவது திடீர் நிறுத்தம்: போக்குவரத்துத் துறை நடவடிக்கை

கி.ஜெயப்பிரகாஷ்

தமிழகத்தில் மொத்தம் 70 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்.டி.ஓ.) உள்ளன. இங்கு தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். ஆட்டோக்களுக்கு பர்மிட் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் 2.30 லட்சம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றில் சென்னையில் மட்டுமே 74 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. அதே சமயத்தில் கர்நாடகத்தில் 1.70 லட்சம் ஆட்டோக்களும், ஆந்திரத்தில் 1.30 லட்சம் ஆட்டோக்களும், கேரளத்தில் 1 லட்சம் ஆட்டோக் களும் ஓடுகின்றன. எனவே அண்டை மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் அதிக ஆட்டோக்கள் ஓடுகின்றன.

சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. மற்ற மாநகரங்களில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஆர்டிஓக்களில் ஆட்டோக்களுக்கு பர்மிட் வழங்குவது தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகளி டம் கேட்டபோது, ‘‘அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் ஆட்டோக்களின் எண்ணிக்கை தேவையை விட அதிகமாக இருக்கிறது. தனி நபர்களிடம் இருப்பதைக் காட்டிலும் தொழிலதிபர்களின் கீழ் அதிகமாக ஆட்டோக்கள் ஓடுகின்றன. புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை ஒழுங்குபடுத்துவதும் கஷ்டமாக இருக்கிறது. எனவே உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவின்படி, ஆட்டோக்களுக்கு பர்மிட் தருவது கடந்த 28-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது’’ என்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம் மேளன (ஏ.ஐ.டி.யு.சி) மாநில பொதுச் செயலாளர் சேஷசயனம் கூறும்போது, ‘‘கடந்த 1996-ல் ஆட்டோக்களுக்கு பர்மிட் வழங்குவது திடீரென நிறுத்தப் பட்டது. 2007-ம் ஆண்டு முதல் மீண்டும் பர்மிட் வழங்கப் படுகிறது. இதுபோல ஒட்டு மொத்தமாக ஆட்டோக்களுக்கு பர்மிட் வழங்குவதை நிறுத்தக்கூடாது.

அதிக ஆட்டோக்களை வைத்திருக்கும் தொழிலதிபர் களை விடுத்து, ஆட்டோ தொழிலாளியை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மட்டுமே பர்மிட் வழங்க வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT