இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 90-வது பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று நடந்தது. பல கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஆனந்த் தியேட்டர் வளாகத்தில் நேற்று விழா நடந்தது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற பொதுச் செயலாளர் பேராசிரியர் இரா.காமராஜ் தலைமையிலான விழாவில், தமிழ் தேசியப் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன், தமிழகக் கவிஞர் மன்ற பொதுச் செயலாளர் பொன்னடியான், நடிகர் சார்லி மற்றும் பலர் பங்கேற்றனர்.
கவிஞர் கே.ஜீவபாரதி எழுதிய ‘எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு’ என்ற நூலை, சி.மகேந்திரன் வெளியிட கவிஞர் பொன்னடியான் பெற்றுக்கொண்டார். நல்லகண்ணுவை வாழ்த்தி பிரமுகர்கள் பேசியதாவது:
பழ.நெடுமாறன்:
வாழும் காந்தியாக, இளைஞர்களுக்கு வழிகாட்டும் விளக்காக திகழ்கிறார் நல்லகண்ணு. அவர் தலைமையில் மூத்த தலைவர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு இணைந்து, ஊழலுக்கு எதிராகவும், அரசியல் சீரழிவை மாற்றவும் ஒன்றுசேர வேண்டும்.
குமரி அனந்தன்:
வாழும் காமராஜராக நல்லகண்ணுவைப் பார்க்கிறேன். காமராஜர்போல இவரும் கட்சியையும், கட்சி நிதியையும் நேர்மையாகக் கையாண்டார்.
சி.மகேந்திரன்:
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேராத ஒருவர், அந்த சமூகத்து மக்களுக்காக பாடுபட்டார் என்றால் அது நல்லகண்ணுதான். தமிழக அரசியல் சூழல் மோசமாகிவிட்டது. நல்லகண்ணு போன்றவர்கள் ஒன்றிணைந்து மாற்றம் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர். பின்னர், நல்லகண்ணு தனது ஏற்புரையில் கூறியதாவது:
ஆங்கிலேய ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் தியாகி திருவேங்கடம்பிள்ளையுடன் சேர்ந்து ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மறையும் இந்த அடிமைகள் மோகம்’ என்று தெருவில் பாட்டுப் பாடியபடி ஊர்வலம் செல்வோம். அவ்வாறு பெற்ற சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல், வேறு வகையான அடிமை மோகத்தில் உள்ளோம். உலகமயமாக்கல் அதிகரித்து வருகிறது.
ஊழலையும், சாதி, மத வெறியையும் ஒழிக்க அனைவரும் கட்சிக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைய வேண்டும். கவுரவக் கொலைகளைத் தடுக்க வேண்டும். தலைவர்கள் ஒன்றுசேர்ந்து புதிய அரசியல், சமூக மாற்றத்துக்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நல்லகண்ணு பேசினார்.
ஜீவா பதிப்பக நிறுவனர் கந்தசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். குடந்தை பாலு தொகுத்து வழங்கினார். முக்தா சீனிவாசன், முன்னாள் மேயர் சா.கணேசன், மூத்த தலைவர்கள், இலக்கியவாதிகள் பலரும் பங்கேற்றனர்.