வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவியை மாணவர்கள் இருவர் படுகொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கீர்த்திகா (11), மாச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற கீர்த்திகா, மாலையில் வீட்டுக்கு வராததினால் அவரது பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடி வந்தனர்.
இதற்கிடையே நேற்று காலை 8 மணியளவில், மகாதேவமலை அடுத்துள்ள முருகம்பட்டு பகுதி மாந்தோப்பில் பள்ளிச் சீருடை அணிந்த சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்து விசாரணை நடத்தி னோம்.
பள்ளியில் இருந்து சைக்கிளில் கீர்த்திகா வீட்டுக்கு திரும்பியபோது, இரு மாணவர்கள் அவருடன் பேசிக்கொண்டு சைக்கிளில் சென்றதாக கீர்த்திகாவின் உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின்படி அதே பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவர்கள் இருவரிடம் விசாரித் தோம். அதில், கீர்த்திகா கொலையில் இரு மாணவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்தன.
ரூ.1,500 கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, கீர்த்திகாவின் கால் கொலுசை திருட இரு மாணவர்களும் திட்டமிட்டு, தங்களுடன் பேசிக்கொண்டு வந்த சிறுமியை மாந்தோப்புக்குள் தூக்கிச் சென்றுள்ளனர். அவர் முரண்டு பிடிக்கவே, கீர்த்திகாவின் ஜடையில் இருந்த ரிப்பனால் கை, கால்களை கட்டி, பின்னர் துப்பட்டாவால் கீர்த்திகாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தெரிய வருகிறது’’ என்று போலீஸார் தெரிவித்தனர்.
வேலூர் சரக டிஐஜி தமிழ்ச்சந்திரன், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். சடலத்தை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.