திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில், திருப்படித் திருவிழா இன்று (31-ம் தேதி) தொடங்குகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள ஐந்தாம்படை வீடான சுப்ரமணிய சுவாமி கோயிலில், டிசம்பர் மாத இறுதியில் திருப்புகழ் திருப்படித் திருவிழா நடப்பது வழக்கம். கோயில் அடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கையிலிருந்து, மலைக்கோயில் வரை ஓராண்டைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 365 படிகளுக்கு, பஜனை குழுவினரால் திருப்புகழ் பாடி பூஜை நடத்தப்படும்.
இந்தாண்டு திருப்புகழ் திருப்படித் திருவிழா இன்றும், நாளையும் நடக்க உள்ளது. இன்று காலை 9 மணிக்கு சரவணப் பொய்கையில் உள்ள முதல் திருப்படியில், பூஜை தொடங்கும். காலை 10 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளித் தேர் உலா, இரவு 8 மணிக்கு சுப்ரமணியர் தங்கத் தேரில் திருவீதியுலா நடைபெறும்.
கோயிலில் அமைந்துள்ள திருப்புகழ் பஜனை மண்டபத்தில், இன்று காலை முதல், நாளை காலை வரை பல்வேறு குழுவினர்களால் திருப்புகழ் பாடல்கள் தொடர்ந்து பாடப்படும். இதற்காக காலை 6 மணி முதல், நாளை இரவு 9 மணி வரை கோயில் நடை திறந்து வைக்கப்படும். கோயில் இணை ஆணையர் புகழேந்தி, தக்கார் ஜெயசங்கர் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.