சுனாமி பேரலை தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு அறிவித்த நிவாரண உதவிகள் இன்னும் முழுமையாக சென்றடையவில்லை என புகார் கூறப்படுகிறது.
கடந்த 2004-ம் ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான மாமல்லபுரம், கல் பாக்கம், சதுரங்கப்பட்டினம், நெய்குப்பம் உள்ளிட்ட பகுதி களை சுனாமி தாக்கியது. ஆழிப்பேரலையின் கோரக் கரங்களில் 300-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதில், 73 பேரின் உடல்கள் மட்டும் கண்டெடுக்கப்பட்டன. மற்றவர்களின் நிலை குறித்து இன்று வரை தெரியவில்லை. சுனாமி தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பத்தாண்டுகள் கடந்தாலும் அரசு அறிவித்த நிவாரணங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, சுனாமியால் பாதிக் கப்பட்ட கானத்துரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் (48) கூறியதாவது: எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், பிழைப்புக்காக காஞ்சிபுரம் மாவட்டம் கானத்து ரெட்டிகுப்பம் பகுதிக்கு வந்தேன். சுனாமி தாக்குதலின்போது கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்தேன். ஆழிப்பேரலையில் சிக்கி மண்ணில் புதைந்தேன்.
மீட்புக் குழுவினர் என்னை கண்டறிந்து மண்ணைத் தோண்டி மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கான சான்றித ழையும் வழங்கினர். மண்ணில் புதைந்ததில் எனது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. மீண்டும் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அப் போதைய முதல்வர் ஜெயலலிதா, எனக்கு நிவாரணமாக ரூ. 25 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். சுனாமியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும் உத்தரவிட்டார்.
பத்தாண்டுகள் ஆகியும் முதல்வர் அறிவித்த நிவாரண உதவியை அதிகாரிகள் வழங்க வில்லை. கடந்த 2009-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் 3 சென்ட் நிலத்துக்கான பட்டா வழங்கினர். பட்டா வழங்கி 5 ஆண்டுகள் ஆகியும், பட்டா வழங்கப்பட்ட நிலம் எங்குள்ளது என தெரிவிக்கவில்லை. மாவட்ட வருவாய்த் துறை அலுவலரிடம் பலமுறை மனு அளித்துள்ளேன். விசாரணைக்கு வருமாறு அழைப்பு கடிதம் மட்டும் வரும். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை என்றார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் சம்பத்குமார் கூறிய தாவது:
சம்பந்தப்பட்ட நபர் இதுவரை என்னை சந்திக்கவில்லை. தற்போது தான் அவரது புகார் விவரம் எனக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறியதாவது: வருவாய்த் துறையினர் அலட்சியமாக செயல்படுவதாக புகார் கூறுவது ஏற்புடையதல்ல. சம்பந்தப்பட்ட நபர் என்னை சந்தித்து மனு அளித்தால் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.