மண்ணடியில் நண்பரை கொலை செய்துவிட்டு, கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர் கனகராஜ் (34). சென்னை மண்ணடி அய்யப்பா செட்டி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது தளத்தில் தங்கியிருந்தார். இவருடன் தூத்துக்குடியை சேர்ந்த நண்பர் சுப்பிரமணி என்பவரும் தங்கி இருந்தார். கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி வீட்டுக்குள் கனகராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடன் தங்கியிருந்த சுப்பிரமணியை காணவில்லை. இது குறித்து எஸ்பிளனேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஒரு மாதம் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் கோவையில் உள்ள ஒரு லாட்ஜில் சுப்பிரமணி தங்கியிருப்பதை தனிப்படை போலீஸார் கண்டுபிடித்து நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். சென்னை அழைத்து வரப்பட்ட சுப்பிரமணி போலீஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில், "நான் சினிமா தயாரிக்க முடிவு செய்தேன். இதற்காக ஊரில் உள்ள வீட்டை விற்க முடிவு செய்தேன். நானும், கனகராஜும் ஒரே ஊர் என்பதால் வீட்டை விற்க வேண்டாம் என்று அறிவுரை கூறினார். எனது சினிமா ஆசையையும் தடுத்தார். இதனால் அவர் மீது எனக்கு கோபம் ஏற்பட்டது. இந்த நிலையில் தனது மனைவி வருவதால் அறையை காலி செய்யும்படி என்னிடம் கனகராஜ் கூறினார். நான் அறையை காலி செய்ய மறுக்கவே கனகராஜுக்கும், எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர் என்னை தரக்குறைவாக பேசியதால் அவர் மீது எனக்கு கடுமையான ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவு கனகராஜ் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் இருந்த அரிவாளால் அவரை வெட்டி கொன்றேன். பின்னர் பெங்களூர், டெல்லி, விசாகப்பட்டினம் என்று சுற்றினேன். கோவை லாட்ஜில் தங்கி இருந்தபோது சிக்கிக் கொண்டேன்" என்று வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.