தமிழகம்

காங்கிரஸையும் மக்களையும் பிரிக்க முடியாது: 130-வது நிறுவன நாளில் இளங்கோவன் பேச்சு

செய்திப்பிரிவு

காங்கிரஸ் பேரியக்கத்தையும் இந்திய மக்களையும் பிரிக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் 130-வது நிறுவன தினவிழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி 1885 ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நிறுவப்பட்டது. கட்சி யின் 130-வது ஆண்டு நிறுவன நாள் விழா இந்தியா முழுவ தும் கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கட்சிக் கொடியை ஏற்றினார்.

காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டு களுக்கு மேல் கட்சிப் பணியாற்றி ஓய்வுப்பெற்ற எம். மணிக்கு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முன்னாள் நிதி யமைச்சர் ப.சிதம்பரம் வழங்கினார். விழாவையொட்டி ஏராளமான காங்கிரஸார் திரண்டிருந்தனர்.

விழாவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியையும் இந்திய மக்களையும் பிரிக்க முடியாது. ஏனென்றால் காங்கிரஸ் பேரியக்கம் இந்திய மக்களுடன் பின்னிப்பிணைந்த இயக்கமாகும். தொடர் தோல்விகளால் நாங்கள் துவண்டு போக மாட்டோம். இனி வருகின்ற காலங்களில் மீண்டும் நாங்கள் எழுவோம்.

புதிதாக பிறக்கவுள்ள 2015-ம் ஆண்டில் பாஜக அரசின் தவறான போக்குகளை கண்டித்து போராட்டங்களை நடத்துவோம். மேலும் தமிழகத்தில் உள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் 29-ம் தேதி வேலைநிறுத்தம் செய்வதாக இருந்த நிலையில், முன்கூட்டியே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை என்றாலும் பெரியளவில் மக்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர். எனவே, தமிழக அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் டாக்டர் ஜெயக்குமார், விஜயதாரணி எம்.எல்.ஏ., மாவட்டத் தலைவர்கள் ராயபுரம் மனோ, ரங்கபாஷ்யம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT