தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக கே.ஞான தேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மாலை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய தலைவராக இருக்கும் கே.ஞானதேசிகன், தமிழக அரசின் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஊழல் கண்காணிப்புத் துறை ஆணையர், நிர்வாகச் சீர்திருத்தத் துறை ஆணையர் ஆகிய பொறுப்பு களையும் கூடுதலாக கவனிப்பார்.
தலைமைச் செயலராக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத், அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனம் மற்றும் பொது இயக்குநர் பயிற்சி மையத்தின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
நெல்லையைச் சேர்ந்தவர்
புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள கே.ஞான தேசிகன், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் திருவேங்கடநாதபுரத்தைச் சேர்ந்தவர். 1959-ம் ஆண்டு ஏப்ரல் 16-ல் பிறந்த இவர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வம்சாவளியைச் சேர்ந்தவர். 1982-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார்.
தமிழக நில நிர்வாகத்துறை உதவி கலெக்டராக 1984-ம் ஆண்டு ஜூலையில் பணியைத் தொடங்கிய ஞானதேசிகன், பின்னர் நிதித்துறையில் உதவிச் செயலர், துணைச் செயலர், வேளாண் துறை, ஊரக வளர்ச்சித் துறைகளில் திட்ட அதிகாரி, தொழிற்துறையில் கூடுதல் இயக்குநர் மற்றும் துணைச் செயலராக இருந்துள்ளார்.
1991-ல் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார். 2001 மே முதல் 2003 டிசம்பர் வரை மின் வாரியத் தலைவராகவும், 2005 ஏப்ரல் வரை பள்ளிக் கல்வித்துறை செயலராகவும் பணியாற்றினார். ஏப்ரல் 2005 முதல் 2010 மே வரை தமிழக நிதித்துறை முதன்மைச் செயலராகவும், 2010 மே முதல் 2012 செப்டம்பர் வரை தமிழக உள்துறை முதன்மைச் செயலராகவும் பணியாற்றினார். 2012 செப்டம்பர் 28 முதல் மின் வாரியத் தலைவராக பணியாற்றி வந்தார்.