தமிழகம்

ஆட்கொணர்வு வழக்கில் சென்னை மேயரின் மகனுக்கு நோட்டீஸ்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஆட்கொணர்வு வழக்கில், சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளிவேல ராகேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் சென்னையில் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறேன். எனது முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டேன். அதன்பிறகு சவுமியாவை திரு மணம் செய்துகொண்டேன். எங்க ளுக்கு நயிசா என்ற குழந்தை உள்ளது.

நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நாய்கள் கண் காட்சியில் எனது மனைவி சவுமியா கலந்துகொள்வது வழக்கம். அப்போது, நாய்கள் கண்காட்சி நடத்தும் கிளப்பின் தலைவராக இருக்கும் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி எனது மனைவிக்கு அறிமுகமானார்.

தொடக்கத்தில் நண்பராக இருந்த அவர், நாளடைவில் எனது குடும்ப விவகாரங்களில் தேவை யில்லாமல் தலையிடத் தொடங் கினார். என் மனைவியை கைப் பொம்மையாகவே மாற்றிவிட்டார். எனது அமைதியான வாழ்க்கை சீரழிந்தது.

எனது மனைவியையும், குழந் தையையும் சில நாட்களாக காண வில்லை. எனது நண்பர்கள், உற வினர்கள் மூலம் விசாரித்ததில் அவர்களை வெற்றி துரைசாமி சட்டவிரோதமாக வைத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆழ்வார்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனது மனைவி மற்றும் குழந்தையை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழ் வாணன், மதிவாணன் ஆகியோர் இந்த வழக்கை நேற்று விசாரித்து வெற்றி துரைசாமிக்கு, வழக்க றிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசார ணையை வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்த வழக்கு பற்றி தகவல் தெரிந்ததும், சவுமியா தனது மகள் மற்றும் பெரியப்பா வுடன் உயர் நீதிமன்றத்துக்கு வந்தார். ஆனால் அதற்குள் நீதிமன்ற நேரம் முடிந்துவிட்டது.

பின்னர் சவுமியா நிருபர்களிடம் கூறியதாவது:

எனது கணவர் வெளிவேல ராகேஷ் போதைக்கு அடிமை யானவர். வரதட்சணை கொடுமை குறித்து ராஜமுந்திரி காவல் நிலையத்தில் அவர் மீது புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது. ராஜமுந்திரி நீதிமன்றத் தில் நான் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், பழிவாங்கும் நோக்கில் என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். என்னை யாரும் கடத்தவும் இல்லை. சட்டவிரோதமாக வைத்திருக்கவும் இல்லை. நான் தற்போது எனது மகளுடன் ராஜமுந்திரியில் உள்ள எனது தாய், தந்தை பாதுகாப்பில்தான் இருக்கிறேன்.

இவ்வாறு சவுமியா கூறினார்.

          
SCROLL FOR NEXT