பஞ்சாப் பொறியாளரிடம் இருந்து ரூ.28 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களை பறித்துச் சென்ற ஆட்டோ டிரைவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் போமல். துரைப்பாக்கத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிகிறார். சொந்த ஊருக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை ரயிலில் சென்னை வந்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து துரைப்பாக்கத்துக்கு ஆட்டோவில் சென்றார்.
மன்றோ சிலை அருகே வந்தபோது திடீரென ஆட்டோவை நிறுத்திய டிரைவர், போமலை கீழே இறங்கச்சொல்லி கத்தியைக் காட்டி மிரட்டினார். அவர் இறங்கியதும் லக்கேஜ் பைகளுடன் ஆட்டோவை ஓட்டிச் சென்றுவிட்டார். அந்தப் பையில் ரூ.28 ஆயிரம் மற்றும் 2 செல்போன்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போமல் கொடுத்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.