தமிழகத்தில் பரவலாக, 4 லட்சத்துக் கும் அதிகமான மண் பாண்டத் தொழி லாளர்கள் உள்ளனர். தற்போது இந்தத் தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவியும் சலுகையும் காட்ட மறுப்பதால் நலிவடைந்து போய் உள்ளது. இந்தத் தொழிலுக்கு மூல ஆதாரமே களிமண்தான். இந்தக் களிமண்ணை அள்ளுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அறிவித்த 4 ஆயிரம் ரூபாய் மழைக்கால நிவாரண உதவித் தொகை வழங்காததால் தற்போது தமிழகத்தில் 3 லட்சம் தொழிலாளர்கள் மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். அதனால், இந்த தலைமுறையோடு மண்பாண்ட தொழில் மறைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மண்பாண்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திண்டுக்கல் அருகே காமாட்சி என்பவர் கூறும்போது, ‘‘இப்போ யாரும் மண் பாண்டம் வாங்குவது கிடையாது. காஸ் அடுப்பு வந்து அடுப்பு விக்கிறதும் போயிட்டு. மண் பானையில் சாப்பிட்டா எந்த சீக்கும் வராதுன்னு நமக்கு முன்னால வாழ்ந்தவங்க நம்புனாங்க. அவங்களுக்கு எந்த மருந்தும் தேவைப்படலை. நாங்க நல வாரியத்தில் பதிந்தும் ஒரு உதவியும் கிடைக்கலை. முன்னெல்லாம் எங்களுக்கு பேங்க்ல கடன் கொடுத்தாங்க. இப்போ அதையும் நிறுத்திட்டாங்க. மழைக்காலத்தில் ஆறு மாசம் தொழில் செய்ய முடியாது. ரொம்ப கஷ்டப்படுறோம்'' என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு மண் பாண்டத் தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சேம நாராயணன் கூறும்போது, “கடந்த ஜன. 12-ம் தேதி சட்டசபையில் தமிழக அரசு, கதர் தொழில் வாரியம் மூலம் மழைக்காலத்தில் மண்பாண்டத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாதம் 4 ஆயிரம் ரூபாய் மழைக்கால நிவாரணம் வழங்குவதாக அறிவித்தது. தொழிலாளர்களிடம் விண்ணப்பம் வாங்கியதோடு சரி, தற்போது வரை அரசு உதவித் தொகை வழங்கவில்லை. மண் பாண்டத் தொழிலுக்கு மூலப்பொருள் களிமண்தான். அந்த களிமண் எல்லா இடங்களிலும் கிடைக்காது. இந்தக் களிமண்ணை அள்ளுவதற்கும் அரசு அனுமதி வழங்கவில்லை.
மணல், மரங்கள், மலைகளை கொள்ளையடித்தவர்களை அரசு கண்டுகொள்வதில்லை. ஆனால், ஏரியில் களிமண் அள்ளும் ஏழை மண்டபாண்ட தொழிலார்கள் மீது வழக்கு பதிவு செய்கின்றனர். அவர்கள் மாட்டு வண்டி, மாடுகளை பறிமுதல் செய்கின்றனர். இதனால், அவர்களுடைய ஜீவ ஆதாரம் பாதிக்கப்படுகிறது. அதனால், இப்போது 70 சதவீதம் தொழிலாளர்கள் மாற்று தொழிலுக்கு சென்றுவிடுகின்றனர்'' என்றார்.