தமிழகம்

சட்டப்பேரவை வளாகத்தில் மயங்கி விழுந்த தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ சுந்தரராஜன் நேற்று மயங்கி விழுந்தார்.

தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முடிவடைந்தது. சட்டப்பேரவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதற்கான அறிவிப்பை

சபாநாயகர் நேற்று மதியம் 2.45 மணியளவில் வெளியிட்டார். இதையடுத்து அமைச்சர்களும், எம்எல்ஏ.க்களும் அவையை விட்டு வெளியேறினர். அப்போது,

தேமுதிகவில் அதிருப்தி எம்எல்ஏவாக செயல்பட்டு வரும் மதுரை மத்திய தொகுதி உறுப்பினர் சுந்தரராஜன் அரசு கொறடா அலுவலகத்துக்கு சென்றார்.

அங்கு, எதிர்பாராத விதமாக அவர் மயங்கி விழுந்தார். சட்டப்பேரவை வளாகத்தில் பாதுகாப்புக்காக இருந்த காவலர்கள் அவரை ஓடிச்சென்று தூக்கினர்.

சுந்தரராஜனின் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவக்குழு, நீண்ட நேரமாகியும் மதிய உணவு சாப்பிடாமல் இருந்ததால் ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம்

ஏற்பட்டதாக கூறி, முதலுதவி சிகிச்சை அளித்தது. பின்னர், அவர் பேரவை வளாகத்திலிருந்து புறப்பட்டு சென்றார். சுந்தரராஜன் எம்.எல்.ஏ ஏற்கனவே ஒருமுறை

பேரவை வளாகத்தில் மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT