மந்தைவெளியில் அண்ணனுடன் ஸ்கூட்டரில் சென்ற 10-ம் வகுப்பு மாணவி பஸ் மோதியதில் பரிதாப மாக இறந்தார். பஸ்ஸை நிறுத் தாமல் சென்ற டிரைவரை, பொது மக்கள் பிடித்து சரமாரியாக அடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி விஜயா. இவர்களின் மகன் விக்னேஷ் (19). மகள் கங்காதேவி (15). விக்னேஷ் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கங்காதேவி மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கணவர் இறந்துவிட்டதால், விஜயா வீட்டுவேலை செய்து குடும்பத்தை கவனித்துக் கொண்டு, மகன் மற்றும் மகளை படிக்க வைத்து வருகிறார்.
நேற்று காலை கங்காதேவியை, அவரது அண்ணன் விக்னேஷ் ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். மந்தைவெளி தேவநாதன் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மாநகர பஸ் (கிழக்கு தாம்பரத்தில் இருந்து உயர் நீதிமன்றம் செல்லும் - எச் 51) ஸ்கூட்டரை முந்திச் சென்றது. அப்போது கங்காதேவி தோளில் மாட்டியிருந்த ஸ்கூல் பேக் பஸ்ஸின் பக்கவாட்டில் சிக்கியது. இதில் நிலைத் தடுமாறி ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்த கங்காதேவி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.
சாலையில் இருந்தவர்கள் மற்றும் வாகனத்தில் வந்தவர்கள் சத்தம் போட்டும் பஸ் நிற்கவில்லை. பின்னால் வாகனத்தில் விரட்டிச் சென்ற பொதுமக்கள் பஸ்ஸை நிறுத்தி, டிரைவரை சரமாரியாக அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர். கீழே விழுந்தபோது தலையில் அடிபட்டதால், கங்காதேவி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற கங்காதேவியின் அண்ணன் விக்னேஷுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. கங்காதேவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அடையாறு போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குரோம்பேட்டையை சேர்ந்த பஸ் டிரைவர் இளையராஜாவை (38) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.