தமிழகம்

சென்னை திமுக உட்கட்சி தேர்தலில் மோதல் அரிவாள் வெட்டு; பெட்ரோல் குண்டு வீச்சு: 31 வட்டங்களில் தேர்தல் ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

சென்னையில் நடந்த திமுக உட்கட்சித் தேர்தலில் சில இடங்களில் வன்முறை நிகழ்ந்தது. அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தன. இதற்கிடையே, 31 வட்டங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் திமுக உட்கட்சித் தேர்தல் நடந்து வருகிறது. சென்னையில் பெரம்பூர் வடக்கு மற்றும் தெற்கு, ராயபுரம் கிழக்கு - மேற்கு, துறைமுகம் கிழக்கு - மேற்கு, கொளத்தூர் கிழக்கு - மேற்கு, திரு.வி.க.நகர் வடக்கு - தெற்கு, மதுரவாயல் வடக்கு - தெற்கு, திருவல்லிக்கேணி, ஆலந்தூர் தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் 63 வட்டங்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது. ஒரு சில இடங்களில் கோஷ்டி பூசலால் மோதல் ஏற்பட்டு பரபரப்பு காணப்பட்டது.

அரிவாள் வெட்டு

வடசென்னை மாவட்டம் திருவிக நகர் பகுதி 76-வது வட்டத் தேர்தல், அதே பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் தற்போதைய வட்டச் செயலாளரை எதிர்த்து கோவிந்தன் என்பவர் போட்டியிடுகிறார். தேர்தல் தொடங்கிய சிறிது நேரத்தில் கோவிந்தன் அணியை சேர்ந்தவர்களை ஒரு கும்பல் தாக்கியது. இதில் பன்னீர்செல்வம் என்பவருக்கு தலை, கையில் அரிவாள் வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீஸில் பன்னீர்செல்வம் புகார் கொடுத்துள்ளார்.

பெட்ரோல் குண்டு வீச்சு

கோயம்பேடு பேருந்து நிலைய பாலத்தின் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் 127-வது வட்டத்துக்கான தேர்தல் நடந்தது. இதில் தற்போது பதவியில் இருக்கும் குமரனை எதிர்த்து லோகு என்பவர் போட்டியிடுகிறார். நேற்று காலை வாக்களிக்க பெண்கள் உட்பட பலர் வரிசையில் நின்றிருந்தனர். அப்போது, பாலத்தில் இருந்து சிலர் 2 பெட்ரோல் குண்டுகளை திருமண மண்டபத்துக்குள் வீசினர். அவை வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது.

பெட்ரோல் குண்டு வீசியது யார் என்பது தெரியவில்லை. குமரன், லோகு ஆதரவாளர்கள் பரஸ்பரம் குற்றம்சாட்டி அடிதடி மோதலில் ஈடுபட்டனர். மண்டபத்தில் இருந்த நாற்காலிகளை தூக்கி எறிந்தனர். தகவலறிந்து வந்த கோயம்பேடு உதவி ஆணையர் மோகன்ராஜ் தலைமையிலான போலீஸார், இரு தரப்பையும் எச்சரித்து அமைதி ஏற்படுத்தினர்.

இதற்கிடையே, சில வட்டங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் இன்று (நேற்று) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக வட்டத் தேர்தலில், வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதிக்குள் அடங்கிய 39, 39அ, 40, 40அ, 42, 42அ, 43, 43அ மற்றும் மேற்கு பகுதிக்கு உட்பட்ட 38, 38அ, 41, 41அ, 47, 47அ ஆகிய வட்டங்களில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை தெற்கு மாவட்டம் சைதாப்பேட்டை கிழக்கு பகுதிக்கு உட்பட்ட 170, 170அ, 171, 172, 172அ, 174, 174அ மற்றும் மேற்கு பகுதிக்கு உட்பட்ட 139, 139அ, 140அ, 142, 142அ ஆகிய வட்டங்களிலும் பெரம்பூர் வடக்கு பகுதியில் 37, தெற்கு பகுதியில் 45, சேப்பாக்கம் பகுதியில் 114அ, திருவல்லிக்கேணியில் 119, தியாகராய நகரில் 132அ ஆகிய வட்டங்களிலும் தேர்தல் ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் அன்பழகன் கூறியுள்ளார்.

நேற்று காலை வாக்களிக்க பெண்கள் உட்பட பலர் வரிசையில் நின்றிருந்தனர். அப்போது, பாலத்தில் இருந்து சிலர் 2 பெட்ரோல் குண்டுகளை திருமண மண்டபத்துக்குள் வீசினர். அவை வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

SCROLL FOR NEXT