தமிழகம்

எனக்கும் முதல்வராகும் தகுதி உள்ளது: திருநாவுக்கரசர்

செய்திப்பிரிவு

காங்கிரஸ் கட்சியின் 130-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி.புஷ்பராஜ் தலைமை வகித்தார்.

இதில் பங்கேற்ற கட்சியின் தேசிய செயலர் சு. திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மோடி, ஆட்சிப் பொறுப் பேற்றது முதல் இதுவரை ஆக்கப் பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோடி வெளிநாடு வாழ் இந்தியராகத்தான் உள்ளாரே தவிர, இந்தியாவின் பிரதமராக இல்லை.

போக்குவரத்து தொழிலாளர் களின் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். மதமாற்ற விவகாரம் பாஜக-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் எனக் கூறுவது கண்டனத்துக்கு உரியது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு பாஜக போட்டியிடும் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் முதல்வர் வேட்பாளர் குறித்து கட்சியின் தலைமைதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

ஒருவேளை உங்களை அறிவித் தால் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழக முதல்வராக யாரோ யாரோ ஆசைப்படும்போது நான் ஆசைப்படக் கூடாதா? ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக லாம் என்றால் எனக்கு அந்த தகுதி கிடையாதா? சட்டப்பேரவை உறுப்பினராக அதிகபட்சமாக வெற்றி பெற்றவர்களில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அன்பழகனுக்கு அடுத்தபடியாக நான் 8 முறை வெற்றி பெற்றுள்ளேன். முதல்வராக அனைத்து தகுதியும் எனக்கு உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT