ரயில்வே துறை நடத்திய போட்டித் தேர்வில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்ததற்கு மாநிலங்களவையில் அதிமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
மாநிலங்களவையில் நேற்று கூட்டம் தொடங்கியதும், அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் தலைமையிலான உறுப்பினர்கள், அவையின் மையப்பகுதிக்கு வந்து ரயில்வே துறையை கண்டித்து கோஷமிட்டனர். ரயில்வே துறை நடத்திய போட்டித் தேர்வு ஒன்றில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றிய கேள்வி கேட்கப்பட்டிருந்ததற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேசிய எம்.பி. நவநீதகிருஷ்ணன், “தேர்வில் ஜெயலலிதாவைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டிருப்பது மிகவும் தவறான செயலாகும்” என்றார். அதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, “இந்த விவகாரத்தை மத்திய ரயில்வே துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பேன்” என்று உறுதியளித்தார். இதனிடையே, சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பாக மேற்கு வங்க மாநில அமைச்சர் மதன் மித்ரா கைது செய்யப்பட்டதை கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களும் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டேரக் ஓபிரையான் பேசும்போது, “அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் சிபிஐ-யை மத்திய அரசு பயன்படுத்துகிறது. அரசியல் கட்சியொன்றின் தலைவர் ஒருவர், சிபிஐ-யை பொம்மையைப் போன்று ஆட்டுவிக்கிறார்” என்றார்.
அதற்கு மறுப்புத் தெரிவித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசும்போது, “சிபிஐ-யின் செயல்பாட்டில் மத்திய அரசோ, அரசியல் கட்சியின் தலைவரோ தலையிடவில்லை. சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது” என்றார்.