தமிழகம்

கடலூர் அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை மரணம்

செய்திப்பிரிவு

கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று காலை பச்சிளம் குழந்தை சிகிச்சைப் பலனின்றி இறந்தது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருவாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவன். இவரது மனைவி புகழ்வாணி. தலைப் பிரசவத்துக்காக கடலூரை அடுத்த கோண்டூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு புகழ்வாணி வந்துள்ளார். இந்நிலையில் நவம்பர் 19-ம் தேதி புகழ்வாணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று காலை யில் அவர் வழக்கம்போல குழந்தைக்கு பால் கொடுத்தபோது, சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, தனது சகோதரர் பிரபு மற்றும் சகோதரி ஜோதி ஆகியோரை அழைத்துக் கொண்டு குழந்தையை கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு புகழ்வாணி கொண்டு சென்றார். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், குழந்தையை உள் நோயாளி பிரிவில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், சில மணி நேரத்தில் குழந்தை இறந்து விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி யடைந்த புகழ்வாணி மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்து விட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

SCROLL FOR NEXT