அரசுப் பேருந்து ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் இடையே பேருந்தில் ஏற்பட்ட சண்டையால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த தாய், அவரது மகன் உட்பட 3 பேர் பலியாயினர்.
ஆத்திரமடைந்த பொதுமக்கள், அரசு பேருந்தை அடித்து நொறுக்கி சாலை மறியலில் ஈடுபட்டதால் திருவண்ணாமலை நகரில் பெரும் பதற்றம் நிலவியது.
திருவண்ணாமலை, தேனிமலை எம்.கே.எஸ். தியேட்டர் தெருவில் வசிப்பவர் கட்டுமான தொழிலாளி வெங்கடேசன். இவரது மனைவி கலைவாணி(30). இவர்களது பிள்ளைகள் நந்தினி(6), விஷ்ணு(5) ஆகியோர் தி.மலையில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி வகுப்பு படித்தனர். பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் இருவரையும் செவ்வாய்க்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் அழைத்துகொண்டு கலைவாணி வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும், அதே பள்ளியில் படித்த டீ விற்பனையாளர் ஆனந்தன் மகன் சுமனையும்(5) அழைத்துச் சென்றுள்ளார்.
திருவண்ணாமலை, தேனிமலை தண்டராம்பட்டு மெயின் ரோட்டில் உள்ள மர இழைப்பகம் எதிரே சென்றபோது, இருசக்கர வாகனம் மீது, தி.மலையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் சுமன், விஷ்ணு, கலைவாணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி நந்தினி, ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில், அப்பகுதி மக்கள் அனுமதித்தனர். அங்கு, அச்சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து 200 அடி தூரம் சென்று கெங்கையம்மன் கோயில் எதிரே நின்றது. பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் கீழே குதித்து கெங்கையம்மன் கோயில் தெரு வழியாக தப்பி ஓடிவிட்டனர். 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான அரசு பேருந்து கண்ணாடிகளை, பொது மக்கள் கற்களால் அடித்து நொறுக்கினர். மேலும், கருங்கற்களை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற தி.மலை நகர காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான போலீஸார், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
“டீசல் பிடிப்பதில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பேருந்து ஓடியபோது சண்டை போட்டுக்கொண்டதால் 3 உயிர்கள் பலியானது. இதை விபத்து என்று கூறமுடியாது. அலட்சியமாக பேருந்தை இயக்கிய காரணத்தால் 3 பேர் பலியாகியுள்ளனர். தப்பி ஓடிய ஓட்டுநர், நடத்துநரை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும். தேனிமலையில் மாரியம்மன் கோயில், விநாயகர் கோயில், கெங்கையம்மன் கோயில் முன்பாக 3 இடங்களில் வேகத்தடை அமைத்து தர வேண்டும். தேனிமலை பகுதியில் பேருந்துகளை மெதுவாக இயக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
உங்கள் கோரிக்கைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆய்வாளர் சுரேஷ் கொடுத்த உத்தர வாதத்தை, ஏற்க மறுத்துவிட்டனர்.
இதனிடையே, விபத்துக்கு காரணமான அரசு பேருந்தை ஆயுதப்படை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். அதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை பேருந்தை எடுக்க விடமாட்டோம் என்றனர். இதன்பின்னர், கோட்டாட்சியர் முத்துகுமாரசாமி, வட்டாட்சியர் வேடியப்பன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். “3 இடங்களில் வேகத்தடை அமைக்கப்படும், தேனிமலையில் பேருந்துகளை மெதுவாக இயக்க அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு பரிந்துரை செய்யப்படும்” என்று உறுதியளித்தனர். அதன்பேரில் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இச்சம்பவத்தால், தி.மலை - தண்டராம்பட்டு சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தி.மலை நகர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தப்பி ஓடிய செங்கம் வட்டம் கீத்தாண்டப்பட்டு கிராமத்தில் வசிக்கும் அரசு பேருந்து ஓட்டுநர் கிருஷ்ணன்(40), போலீஸில் சரணடைந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர்.