மானிய விலை மண்ணெண்ணெய் விநியோகத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு பிற்போக்குத்தனமானது என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் மானிய அளவைக் குறைக்கும் வகையில், ரேஷன் கடைகளில் மானியத்துடன் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விநியோகத்தை முழுமையாக நிறுத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.
இதைப் பற்றி அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கு, மத்திய நிதியமைச்சர், மாண்புமிகு அருண் ஜெட்லி அவர்கள் விரைவில் கடிதம் எழுத விருப்பதாகவும் நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
பா.ஜ.க. மத்திய அரசில் பொறுப்பேற்றதற்குப் பிறகு, அரசின் பல்வேறு துறைகளுக்கான மானியங்களைக் குறைப்பதற்கும் அல்லது நீக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, டீசல் போன்றவைகளுக்கான மானியம் கடந்த நிதி நிலை அறிக்கையில் 63 ஆயிரத்து 427 கோடி ரூபாயாக இருந்தது, தற்போது மண்ணெண்ணெய் மீதான மானியத்தைக் குறைத்து விட்டால், மத்திய அரசின் மானியம், 5 ஆயிரத்து 852 கோடி ரூபாய் குறையுமென்று கூறுகிறார்கள்.
மத்திய அரசு வழங்கும் மானியத்தின் அளவு குறையுமென்ற போதிலும், மண்ணெண்ணெயை எரிபொருளாகவும், விளக்கேற்றவும் பயன்படுத்துவோர் மிகவும் அடித்தட்டிலே உள்ள கிராமப்புற மக்கள் தான் என்பதை மனதிலே கொண்டு, அப்படிப்பட்ட ஏழையெளிய மக்களைப் பாதிக்கும் இத்தகைய பிற்போக்கு நடவடிக்கைகளைக் கை விட்டு விடுவது தான் நல்லது.
ரேஷன் கடைகளில் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தமிழக அரசும் மத்திய அரசுக்கு இந்தக் கருத்தினை அரசின் சார்பில் வலியுறுத்த முன்வரும் என்று நம்புகிறேன்" என கூறியுள்ளார்.