மெட்ரோ ரயில் பணிகளால் கிடப்பில் போடப்பட்டிருந்த திருமங்கலம் மேம்பாலம் பணிகள் இம்மாத இறுதியில் மீண்டும் தொடங்குகிறது. மார்ச் மாதம் இறுதிக்குள் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.
திருமங்கலம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், கோயம்பேடு சாந்தி காலனி சந்திப்பில் இருந்து திருமங்கலம் சிக்னல் வரையில் ரூ.61 கோடி செலவில் மேம்பாலம், சுரங்க நடைபாதை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 2011-ம் ஆண்டில் பணிகள் தொடங்கின. ஏப்ரல் 2013-க்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்துதல், போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மேம்பாலப் பணிகளை திட்டமிட்டபடி முடிக்க இயலவில்லை.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘திருமங்கலம் மேம்பாலம், சுரங்க நடைபாதை பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதில் தொடர்ந்து இழுப்பறி நீடித்தது.
இதெல்லாம் முடிந்து பிறகு, பணிகள் வேகமாக நடந்தன. ஆனால், மெட்ரோ ரயில் பணிகளால் மேம்பால பணிகள் சற்று தடைபட்டிருந்தன. இப்பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளை இம்மாதம் இறுதிக்குள் முடித்துவிடுவார்கள். அதன் பிறகு, எஞ்சியுள்ள மேம்பாலப் பணிகளை விரைவாக மேற்கொண்டு வரும் மார்ச் மாதத்துக்குள் பாலம் கட்டி முடிக்கப்படும்’’ என்றனர்.